ஓடிடி தளங்களுக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு: சென்சாரும் உண்டா?

 

கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் திரையரங்குகளில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாத காரணத்தினால் ஒரு சில திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகின என்பது தெரிந்ததே. அதுமட்டுமன்றி ஓடிடிக்கு என தனியாக வெப்சீரியல்களும் எடுக்கப்பட்டன. இந்த வெப்சீரியல்களில் ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாகவும் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு பார்க்கும்படியான காட்சிகள் இதில் இல்லை என்றும் இதற்கு ஒரு வரைமுறை தேவை என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர் 

சினிமாவில் இருப்பதுபோல் ஓடிடியிலும் வரும் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களுக்கும் சென்சார் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இந்த நிலையில் மத்திய அரசு திடீரென ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இனி டிஜிட்டல் மீடியா இருக்கும் என்ற உத்தரவு தான் அது

ஆன்லைன் செய்தி நிறுவனங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளதால் இனிமேல் ஓடிடி தளங்களில் தங்கள் இஷ்டத்திற்கு வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் கொண்ட படங்களை ஒளிபரப்ப முடியாது என்ற கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓடிடி தளங்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தாலும் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு பெரும்பாலான சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஓடிடி வெப்சீரிஸ்களுக்கு சென்சாரும் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

From around the web