திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட்தேர்வு நீக்கப்படும்:  திருச்செங்கோடு மாணவருக்கு அஞ்சலி செலுத்தியபின் உதயநிதி பேட்டி 

 

நீட்தேர்வு அச்சம் காரணமாக நேற்று முன்தினம் ஒரேநாளில் தமிழகத்தை சேர்ந்த 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஜோதி ஸ்ரீதுர்கா, தர்மபுரியை சேர்ந்த ஆதித்யா மற்றும் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த மோதிலால் ஆகியோர்கள் நீட்தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர் 

இந்த நிலையில் ஏற்கனவே ஜோதி ஸ்ரீதுர்கா மற்றும் ஆதித்யா வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தி அவர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் நிதி உதவி செய்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று திருச்செங்கோடு பகுதியில் நீட் தேர்வால் உயிரிழந்த மோதிலால் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன் பின்னர் ரூபாய் 5 லட்சம் நிவாரண நிதியையும் அவர் வழங்கினார்

இதனை அடுத்து செய்தியாளர்களை உதயநிதி ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டப் போராட்டத்தை சந்தித்து நீட்தேர்வு நீக்கும் என்று கூறினார். மேலும் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நீட் அநீதியால் உயிரை மாய்த்த திருச்செங்கோடு மோதிலால் வீட்டுக்கு சென்று அவரின் உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினோம். சர்வாதிகாரிகள்- அடிமைகள் துரோகத்தால் மகனை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் கூறி கழகம் சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தோம். மாணவர்களே பொறுமை காப்போம். கழகத் தலைவர் முக ஸ்டாலின்  அவர்கள் தலைமையில் ’நீட்’டில்லா தமிழகம் விரைவில் அமையும்.


 

From around the web