முதல்வரின் அறிவிப்பு மிகப்பெரிய வரப்பிரசாதம்: விஜயகாந்த் பாராட்டு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் அனைத்தும் தள்ளுபடி என அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தேமுதிக சார்பில் எனது வரவேற்பை தெரிவித்து கொள்கிறேன். ஏற்கனவே நிவர், புரெவி புயல்களால் வாழ்வாதாரமின்றி தவித்து வந்த விவசாய பெருமக்களுக்கு, விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல விவசாய பெருமக்களின் வாழ்க்கை, புயல் தாக்குதலில் ஒரு பக்கம் திணறி வந்த நிலையில், விவசாய கடன் தள்ளுபடி என்பது அவர்களுக்கு மிகப்பெரிய ஒரு சந்தோஷத்தையும் நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் என நம்புகிறேன்.
அதேபோல சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அரசு விதிப்படி கட்டணம் நிர்ணயித்து, குளறுபடிகளை களைந்து, மாணவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்கிய தமிழக அரசின் அறிவிப்பை தேமுதிக வரவேற்கிறது.
இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.