முதல்வர் ரத்து செய்த அரியர் தேர்வுக்கு அட்டவணை வெளியிட்ட அண்ணா பல்கலை!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரத்து செய்த அரியர் தேர்வு அட்டவணையை வெளியிட்டு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி காட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளின் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து என்றும் அதுமட்டுமன்றி தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் தேர்வுகளும் ரத்து என்றும் தேர்வு கட்டணம் செலுத்திய அனைவரும் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது இதுகுறித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் இந்த அரசாணைக்கு அண்ணா பல்கலைக்கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் யுஜிசியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் அதிரடியாக அரியர் தேர்வுகளை நடத்த முடிவு செய்ததோடு இதுகுறித்து அட்டவணையும் வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 16 முதல் 28 வரை அண்ணா பல்கலைக்கழக அரியர் தேர்வுகள் நடைபெறும் என்றும் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரியர் தேர்வு ரத்து என்ற அறிவிப்பின் காரணமாக தமிழக மாணவர்களின் பேராதரவைப் பெற்ற முதல்வர் தற்போது அதே அரியர் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்ற அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது