நியூயார்க்கை சேர்ந்த ஸ்டீவன் மென்கிங் என்பவர், வால் ஸ்ட்ரீட்டில் பங்குகள் வர்த்தகராக ஆறு இலக்க சம்பளம் வாங்கி கொண்டிருந்தார். ஆனால், நிதி உலகின் போட்டி நிறைந்த வாழ்க்கையால் ஏற்பட்ட சோர்வு காரணமாக, அந்த பணியை துறந்துவிட்டு, வீட்டிலிருந்தே தனிப்பயிற்சி அளிக்க தொடங்கினார். தற்போது, அவர் 1 மணி நேரத்திற்கு சுமார் ₹86,800 வரை சம்பாதித்து வருகிறார்.
அவர் இதுகுறித்து பேட்டியில் கூறியபோது, ‘கடுமையான வேலை நேரங்களால் ஏற்பட்ட சோர்வுதான் 2014 ஆம் ஆண்டு இந்த மாற்றத்தை எடுக்க காரணம். அதிக மன அழுத்தத்தை கொடுத்த வர்த்தக பணிக்களத்திலிருந்து, வீட்டிலிருந்தே தனிப்பட்ட ஆசிரியராக, மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் பணிக்கு முழு திருப்தியுடன் மாறினேன்.
மென்கிங் இப்போது வாரத்திற்கு 20 முதல் 25 மணிநேரம் வரை மாணவர்களுக்கும் இளம் நிபுணர்களுக்கும் அவர்களின் கல்வி மற்றும் தொழில் இலக்குகளை அடைய உதவுகிறார். இது அவரது முந்தைய பரபரப்பான வாழ்க்கை முறைக்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
“நான் நியூயார்க் நகரத்தில் உள்ள பல பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றினேன். அத்துடன், வைசான்ட் (Wyzant) போன்ற ஆன்லைன் பயிற்சி தளங்களிலும் இணைந்தேன். ஆரம்பத்தில் 1 மணி நேரத்திற்கு சுமார் ₹4,300 முதல் ₹8,600 வரை சம்பாதித்தேன். பின்னர் எனது கட்டணங்களை காலப்போக்கில் அதிகரிக்க அனுமதிக்கும் தளங்களுக்கு முன்னுரிமை அளித்தேன்.”
நான் ஒரு நிதித் துறையைச் சேர்ந்தவன், அதனால் இன்னொரு நிதி வேலைக்குத்தான் செல்ல வேண்டும்,” போன்ற சமூகப் பார்வைகளில் இருந்து விலகி, உண்மையாகவே மனநிறைவை தரும் பணியை தொடரத் தேவையான தைரியத்தை வரவழைத்து கொண்டேன்.
“மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல், வெவ்வேறு பாதைகளை ஆராய்வதற்கு நான் ஒரு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டியிருந்தது. உதாரணமாக நான் முற்றிலும் வேறு பாதைக்கு திரும்பிவிட்டதால் என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் முன்னாள் சக ஊழியர்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள்?’ என்று சிந்திப்பதே இல்லை’ என்று அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.