பாலியல் புகார்.. நடிகர் நிவின் பாலி மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு.. அளித்த விளக்கம்

Published:

திருவனந்தபுரம்: ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகத் தவறான தகவல் பரவி வருகிறது.. இது முற்றிலும் பொய் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.. இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க நான் எந்த எல்லைக்கும் செல்வதில் உறுதியாக இருக்கிறேன் என்று பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி விளக்கம் அளித்துள்ளார்.

பெண் ஒருவர் அளித்த பாலியல் புகார் பெரும் பரபரப்பைக் கிளப்பிய இருந்த நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்து நிவின் பாலி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த 2015இல் பிரபல நடிகை ஒருவர், ஓடும் காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள் அதிகமாக உள்ளதாக புகார்கள் எழுந்தன. இதுபற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற கேரள உயர் நீதிமன்றம் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த ஹேமா கமிட்டி கேரள அரசிடம் சில ஆண்டுகளுக்கு முன்பே தனது ரிப்போர்ட்டை அளித்தது. எனினும் கேரள அரசு வெளியிடாமல் இருந்து வந்தது. நீண்ட சட்ட போராட்டத்திற்குப் பின்னரே அந்த அறிக்கை பெயர்கள் இல்லாமல் பொதுப்படையாக வெளியாகி உள்ளது. இதுவே அங்கு பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பல நடிகைகள் வெளிப்படையாக தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லை குறித்துப் பேசி உள்ளார்கள்.

இதையடுத்து கேரள அரசு சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து தற்போது விசாரித்து வருகிறது. இந்தச் சூழலில் நேரியமங்கலத்தை சேர்ந்த பெண் ஒருவர் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மீது அத்துமீறல் புகார் அளித்தார். பட வாய்ப்பு அளிப்பதாகக் கூறி தன்னை துபாயில் வைத்து பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டினார். அதன் அடிப்படையில் எர்ணாகுளம் ஊன்னுக்கல் போலீசார் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தன் மீதான பாலியல் புகார் குறித்து மலையாள நடிகர் நிவின் பாலி விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனது விளக்கத்தை அளித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் பாலியல் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என்று கூறியுள்ளார்.

அந்த பதிவில், ” ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகத் தவறான தகவல் பரவி வருகிறது.. இது முற்றிலும் பொய் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.. இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க நான் எந்த எல்லைக்கும் செல்வதில் உறுதியாக இருக்கிறேன். மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டோரை வெளிச்சத்திற்குக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கை எடுப்பேன். அக்கறைக்கு நன்றி. மற்ற விஷயங்களை சட்டப்பூர்வமாகக் கையாள்வேன்” இவ்வாறு நிவின் பாலி கூறினார்.

 

 

மேலும் உங்களுக்காக...