தமிழக சட்டமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் கவர்னர் மாளிகையில் புதிய சட்டமன்றம் கட்டலாம் என அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்றம் தற்போது மிகவும் நெருக்கடியான இடத்தில் உள்ளது என்றும் வசதிகள் மிகவும் குறைவாக இருக்கிறது என்றும் எனவே புதிய சட்டமன்ற கட்டிடம் கட்ட வேண்டும் என்ற முடிவு பல ஆண்டுகளாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் புதிய சட்டமன்றத்திற்கான பூமி பூஜை போடப்பட்டது என்றும் ஆனால் அதற்கு மேல் அந்த கட்டிடம் எழவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் புதிய சட்டமன்றத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சி வந்த உடன் அந்த கட்டிடம் மருத்துவமனையாக மாற்றிவிட்டது. எனவே புதிய சட்டமன்றத்திற்கான கட்டிடம் என்ற கனவு தகர்ந்தது.
இந்த நிலையில் நேற்று சட்டமன்றத்தில் உறுப்பினர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் ’தமிழகத்திற்கு கண்டிப்பாக புதிய சட்டமன்ற கட்டிடம் தேவை என்றும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் கண்டிப்பாக புதிய சட்டமன்ற கட்டிடம் அமையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கவர்னர் தங்கி இருக்கும் ராஜ் பவன் தமிழக அரசுக்கு சொந்தமான கட்டிடம் தான் என்றும் அந்த இடத்தில் கூட புதிய சட்டமன்ற கட்டலாம் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் இந்திய ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 700 ஏக்கர் உள்ளது என்றும் அதற்கு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் அவர்கள் இருப்பதால் அந்த இடத்தில் கூட புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த சில வருடங்களாகவே திமுக அரசுக்கும் கவர்னருக்கும் இடையே சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் கவர்னர் மாளிகையில் சட்டமன்ற கட்டிடம் கட்ட தமிழக அரசு முடிவு எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.