News
ஆறு ரூபாய்க்கு ஹெட்செட், டெம்பர் கிளாஸ் விற்பனை: கடையை இழுத்து மூடிய நெல்லை மாநகராட்சி

நெல்லையில் ஆறு ரூபாய்க்கு செல்போன் கடையில் ஹெட்செட் மற்றும் டெம்பர் கிளாஸ் விற்பனை செய்ததை அடுத்து அந்த கடைக்கு நெல்லை மாநகராட்சியில் சீல் வைத்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
புதிதாக தொழில் தொடங்குபவர்கள் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தங்கள் கடையின் விளம்பரத்திற்காகவும் இலவசமாக அல்லது மிகக்குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வது தெரிந்ததே. சமீபத்தில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட பிரியாணி கடை ஒன்று ஒரு ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நெல்லையில் புதிதாக செல்போன் கடை ஒன்று தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையின் விளம்பரத்திற்காக ஆறு ரூபாய்க்கு ஹெட்செட் மற்றும் டெம்பர் கிளாஸ் விற்பனை செய்வதாக அறிவித்தது இந்த அறிவிப்பின் காரணமாக நெல்லை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பொதுமக்கள் கடை முன் குவிந்தனர்.
100 ரூபாய்க்கு மேல் வெளியில் விற்பனையாகும் ஹெட்செட் ரூபாய் 6 என்ற உடன் நூற்றுக்கணக்கானோர் குவிந்து போட்டி போட்டுக்கொண்டு ஹெட்செட் மற்றும் டெம்பர் கிளாஸ் வாங்கினார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது
மேலும் ஊரடங்கு நேரத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் நடந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் புதிதாக திறக்கப்பட்ட செல்போன் கடையை மூடி சீல் வைத்தனர். மேலும் கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
