இத Follow பண்ணுங்க.. நீங்களும் Success ஆகிடலாம் : வெற்றி ரகசியம் சொன்ன கோபிநாத்

2000 ஆண்டுகளின் தொடக்க காலகட்டம் அது. விஜய் டிவி மெல்ல மெல்ல ஸ்டார் விஜயாக மாறிக் கொண்டிருந்தது. புதுமையான நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் என தொலைக்காட்சிகளின் பொழுதுபோக்கின் அம்சத்தையே விஜய்டிவி மாற்றிக் எழுதிக் கொண்டிருந்தது. அவ்வாறு பிறந்த நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் நீயா நானா.

2006-ல் விவாத நிகழ்ச்சியாக அறிமுகமான நீயா நானாவில் தொகுப்பாளராக தனது மீடியா பயணத்தைத் தொடர்ந்தவர் அறந்தாங்கியைச் சேர்ந்த கோபிநாத். இவரின் பேச்சு வன்மையும், தொகுத்து வழங்கும் பாணியும் மக்களுக்குப் பிடித்துப் போக டி.ஆர்.பியில் இன்று வரை முன்னணி இடத்தில் இருக்கிறது நீயா நானா நிகழ்ச்சி.

சமூகத்தில் நிகழும் சிக்கல்கள், குடும்ப உறவுச் சிக்கல் என இவர் தொடாத தலைப்பே இல்லை எனலாம். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக ஒரே நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இவர் மட்டுமே வருவது ஒரு சாதனை என்றே கூறலாம். இந்நிகழ்ச்சி மூலம் பிரபல ஊடகவியலாளராக பரிணாமம் எடுத்த கோபிநாத் பேட்டி எடுக்காத அரசியல், திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள், சாதனையாளர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இவரின் இயல்பான பேச்சு பேட்டி எடுப்பவரை கேள்வி பதில் நிகழ்ச்சி என்றில்லாமல் ஒரு சிறந்த கலந்துரையாடலாகவே இருக்கும்.

சிவக்குமார் வரிசையில் சேர்ந்த நானா படேகர் : செல்பி எடுக்க வந்தவரை அடித்த சம்பவம்

தற்போது முன்னணி தொகுப்பாளராகவும், கல்லூரிகளில் தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் மிளிரும் கோபிநாத் தான் கடந்து வந்த பாதையை பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர் கூறும்போது, “முதன் முதலில் ஊடகத் துறைக்குள் நுழையும் போது அதில் மிக புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்றோ, பரபரப்பாக இருக்க வேண்டும் என்றோ தோன்றியதில்லை. நாம் செய்யும் வேலையில் ஆழ்ந்த அக்கறையும், அர்ப்பணிப்பும் இருந்தாலே சாதித்து விடலாம்.

தற்போது வரை அதைத் தான் செய்து வருகிறேன். நான் செல்லும் நிகழ்ச்சிக்கு 5 நிமிடம் தாமதமானால் கூட முன்கூட்டியே தெரிவிக்கும் பழக்கமும் இருக்கிறது என்றும், இப்படித்தான் நான் எனது துறையில் ஜொலிக்க காரணமாக இருந்திருக்கலாம்“ எனவும் கோபிநாத் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இவரின் ப்ளீஸ், இந்த புத்தகத்தை வாங்காதீங்க என்ற நூல் அனைத்து புத்தகத் திருவிழாக்களிலும் கண்டிப்பாக இடம் பெற்று விற்பனையில் சக்கைப் போடு போட்டு வருகிறது. மேலும் கோபிநாத் சில திரைப்படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews