சமீபகாலமாகவே இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் தான் படங்களில் ஹீரோவாக களம் இறங்குவார்களா? நாங்களும் இறங்குவோம் என அவர்களுக்கு போட்டியாக கிரிக்கெட் வீரர்களும் சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார்கள். அந்த வகையில் சடகோபன் ரமேஷ் எப்போதோ தமிழ் சினிமாவில் நடித்து விட்டார்.
அவரை தொடர்ந்து சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பிரண்ட்ஷிப் என்ற தமிழ் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் மற்றும் ஒரு கிரிக்கெட் வீரரான இர்ஃபான் பதானும் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் தற்போது இவர்கள் வரிசையில் மேலும் ஒரு கிரிக்கெட் வீரர் இணைந்துள்ளார். அவர் வேறு யாருமல்ல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தான். அதுவும் முதல் படமே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உடன். ஆமாங்க நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் ஸ்ரீசாந்த் நடிக்க உள்ளாராம்.
ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காத்து வாக்குல ரெண்டு காதல் படம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இப்படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.