நவராத்திரி விரதமும் அம்பிகை வழிபடும் முறைகளும்

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள், உபவாசியாக இருந்து பூஜித்த பிறகே உணவருந்தி பஞ்சனை மற்றும் பாயில் படுக்காமல் தரையில் விரிப்புகளில் படுக்க வேண்டும். பிரதமைத் திதியில் ஹஸ்த நட்சத்திரம் கூடுமானால் அது உன்னதமான நாளாகும். அந்த நாளில் தேவி தன்னைப் பூஜித்தவருக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுப்பாள் என்று சொல்வார்கள்.

நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கமாகும்.

முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலட்சுமியை வழிபடவேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.

சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.

நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக்கப்பட்டுள்ளது. ஊசிநூல்கொண்டு தைத்தலும் கூடாது. புரட்டாசி சனி விரதம் இந்த நவராத்திரி நாட்களில் வரும்போது எண்ணெய் தேய்க்காது நீராடி அந்த விரதத்தை யும் கைகொள்ளலாம். எண்ணெய் எரித்து வழிபடுதலும் செய்யலாம்.

நவராத்திரி விரதத்தை முறையாகக் கைக்கொள்ள விரும்புவோர் முதலெட்டு நாட்களிலும் பகலில் உணவின்றி இரவில் பூஜை முடித்தபின் பால்பழம், பலகாரம் என்பவற்றை உண்டு, நவமியில் உபவாசமிருந்து பத்தாம் நாள் விஜயதசமியன்று காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்தல் வேண்டும். முடியாதவர்கள் முதலெட்டு நாளிலும் ஒரு நேர உணவுண்டு, கடைசி நாளில் பால் பழம் மட்டும் கொள்ளலாம்.

நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள். தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.

குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும்.படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம். ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள்.

அதேபோன்று, மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல், அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.