நவராத்திரிக்கு இந்த நைவேத்தியம் தான் பிரதானம்….வித விதமா எப்படி செய்வது என்று பார்க்கலாமா…

நவராத்திரி வந்து விட்டாலே தினமும் சுண்டலும் பாயாசமும் தான் கோவிலில் கொடுப்பார்கள் என்பது மட்டுமே நமக்குத் தெரியும். நமக்கெல்லாம் கொண்டைக்கடலை சுண்டல் தான் தெரியும். ஆனால் இங்க பாருங்க. என்னென்ன வகை இருக்குது…என்று தெரியுமா?

கிட்டத்தட்ட 30 வகைகள் உள்ளன என்றால் நீங்கள் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

காராமணி இனிப்பு சுண்டல்

தேவையான பொருள்கள்:

சிவப்பு காராமணி – ஒரு கப்,
பாகு வெல்லம் (பொடித்தது) – ஒரு கப்,
வறுத்துப் பொடித்த எள் – 2 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.

எப்படி செய்வது?

சிவப்பு காராமணியை வறுத்து, 2 மணி நேரம் ஊற வைங்க.

பிறகு குக்கரில் வைத்து, 2 விசில் வந்ததும் இறக்குங்க. வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து சிறிது கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சுங்க.

இதை வெந்த காராமணியுடன் சேர்த்து… எள்ளுப் பொடி, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்… காராமணி இனிப்பு சுண்டல் தயார்.

கடலைப்பருப்பு சுண்டல்

poomparuppu
poomparuppu

இதை பூம்பருப்பு என்றும் சொல்வார்கள். சாப்பிடுவதற்கு மிருதுவாக ருசியாக இருக்கும்.

தேவையான பொருள்கள்:

கடலைப்பருப்பு – 200 கிராம்,
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
கடுகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2,
பெருங்காயத்தூள்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

எப்படி செய்வது?

கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைங்க. பிறகு குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்குங்க.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு… வேக வைத்த கடலைப்பருப்பை தண்ணீர் வடித்து சேர்த்து, உப்பு, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்க.

அவ்ளோ தான். கடலை பருப்பு சுண்டல் ரெடி.

பார்லி சாபுதானா சுண்டல்

தேவையான பொருள்கள்:

பார்லி, ஜவ்வரிசி, வறுத்த வேர்க்கடலை – தலா 100 கிராம்,
பொட்டுக்கடலை – ஒரு டீஸ்பூன்,
வறுத்த முந்திரிப்பருப்பு,
பிஸ்தா பருப்பு – தலா 10,
இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

எப்படி செய்வது?

பார்லி, ஜவ்வரிசியை நன்கு ஊற வைத்து, தண்ணீர் வடிங்க. வாணலியில் எண்ணெய் விட்டு, இஞ்சி விழுது, மிளகுத்தூள் சேர்த்து, ஊற வைத்த பார்லி, ஜவ்வரிசி, உப்பு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறிவிடுங்க.

இதனுடன் வறுத்த வேர்க்கடலை, முந்திரி, பிஸ்தா, பொட்டுக்கடலை சேர்த்துக் கிளறி விட்டு இறக்குங்க. இப்போ பார்லி சாபுதானா சுண்டல் ரெடி.

பச்சைப் பட்டாணி சுண்டல்

தேவையான பொருள்கள்:

பச்சைப் பட்டாணி – 200 கிராம்,
துருவிய கேரட் – 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
கடுகு, எண்ணெய் – ஒரு தலா டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க:

தனியா, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – ஒன்று.

எப்படி செய்வது?

தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்து வைங்க. பச்சைப் பட்டாணியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து… குக்கரில் வைத்து 2விசில் வந்ததும் இறக்குங்க.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வேக வைத்த பட்டாணியை தண்ணீர் வடித்து சேருங்க. இதனுடன் கேரட் துருவல், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, வறுத்துப் பொடித்ததையும் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லியைத் தூவி கலந்து பரிமாறுங்க. உங்கன் அன்பானவரின் அன்பை கூடுதலாகப் பெறுங்க.

வேர்க்கடலை சுண்டல்

verkkadalai sundal
verkkadalai sundal

தேவையான பொருள்கள்:

பச்சை வேர்க்கடலை – 200 கிராம்,
காய்ந்த மிளகாய் – 2,
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
கடுகு, எண்ணெய் – தலா ஒரு ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

எப்படி செய்வது?

வேர்க்கடலையுடன் உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்குங்க.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்து… வேக வைத்த கடலையை தண்ணீர் வடித்து சேர்த்து, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கி வைங்க.

இப்போ சூடான சுவையான வேர்க்கடலை சுண்டல் தயார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.