வழக்குகளில் வெற்றி கிட்ட உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்து தேவியை வழிபடுங்கள்…

ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் பலருக்கும் வருவது சொத்துத் தகராறு தான். அல்லது தொழில் போட்டி. இவற்றை சரிசெய்வதற்குள் அவர்கள் படாத பாடு படுவர். அந்தப் பிரச்சனை எப்போது தீருமோ?

இந்த சுமையை நான் எப்படி இறக்கி வைக்கப் போகிறேனோ என கவலைப்படுவர். இனி இத்தகைய பிரச்சனைகளில் இருந்து அந்த சுமையை இறக்கி வைக்க என்ன செய்வது என்று பார்க்கலாமா…

நவராத்திரியின் 9 நாள்களில் முதல் 3 நாள்கள் துர்காதேவியை வழிபடுகிறோம்.

ChandraKhanta
ChandraKhanta

ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு ரூபத்தில் அம்பிகை அவதாரம் எடுக்கிறாள். அதற்கேற்ப அவருக்கு திருநாமங்கள் உள்ளன. இன்று (28.9.2022) 3ம் நாள் வழிபடும் தேவியின் பெயர் வாராகி. அதே போல நவதுர்க்கையில் 3ம் நாள் வழிபடக்கூடிய தெய்வம் சந்திரகாந்தா என்று தமிழிலும், சந்திரகாண்டா என்று வடமொழியிலும் அழைக்கப்படுகிறது.

சந்திரன் என்றால் எல்லாருக்குமே தெரியும். காண்டா என்றால் வடமொழியில் மணி என்று அர்த்தம். சந்திரகாந்தா என்றால் தமிழில் பிறை அணிந்த தேவி மணியின் ஓசை போன்ற ஒரு அற்புதமான விஷயத்தை உணர்த்துகிற தேவி என்று பொருள்.

மணியின் ஓசை கம்பீரமாக இருப்பது போல இந்த அம்பிகையின் தோற்றம் உள்ளது. இவர் போருக்குப் போகின்ற தேவியாகவே காட்சி தருகிறாள். நமது வாழ்க்கையை நவதுர்க்கையோடு ஒப்பிடலாம். முதலில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிரம்மச்சாரிணியாக தவம் செய்தது.

அதன் பலனாக அவள் பரமேஸ்வரன் என்ற அற்புத சிவத்தை அடைகிறாள். சந்திர பிறையைத் தனக்குப் பரிசாகப் பெறுகிறாள். சிவபெருமானுக்கு அடையாளம் என்னன்னா பிறை அணிதல். அதனால் தான் அம்பிகையின் பிறை அணிந்த கோலங்களில் ஒன்று தான் இந்த சந்திரகாந்தா.

Chandrakanta
Chandrakanta

இந்த அம்பிகைக்கு 3 கண்கள். ஒரு மனிதன் முறையாகத் தவம் செய்து கல்வி, ஞானத்தில் திறன் பெற்றால் அவரது ஞானக்கண் என்பது திறக்கும். இதுதான் 3வது கண்.

சிவபெருமானை மணந்த பிறகு தனது மணாளனுக்கு என்னென்ன அடையாளங்கள் எல்லாம் உண்டோ அதைத் தானும் தவத்தின் பலனாக தானும் பெறுகிறாள். திரிபுரசுந்தரி, முக்கண் நாயகி என்ற அடையாளப் பெயர்கள் உண்டு.

அந்த முக்கண் நாயகி என்ற ரூபம் தான் சந்திரகாந்தா தேவிக்கு அமைந்திருக்கிறது. இந்த அம்பிகைக்கு வாகனம் சிங்கம். இந்தத் தேவிக்கு சம்பங்கி அல்லது துளசி மலர்களால் அர்ச்சனை செய்யலாம். சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டலும், பலாப்பழமும் நைவேத்தியமாக வைத்து பூஜிக்கலாம்.

காம்போதி ராகத்தில் பாட்டுப் பாடி நீல நிற உடையையும் அணியலாம்.

இந்த அம்பிகையை வழிபாடு பண்ணுவதால் நம்மோட வாழ்க்கையில் மன அமைதி, குளுமையைத் தருகிறாள். பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு மற்றும் மனத்தெளிவைத் தருகிறாள். போருக்கு புறப்பட்டு நான் தான் வெற்றியின் தேவதை என்பதால் வழக்குகளில் வெற்றி தரும் தேவதையாகவும் இருக்கிறாள்.

இவள் ஒரு நீதி தேவதையாக இருப்பதால் உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தால் தான் நமக்கு நலன் கிடைக்கும். யோக நிலையில் நாம் அடையக்கூடிய அடுத்த நிலைக்கு நம்மைக் கொண்டு செல்வாள். அதாவது மணிப்பூரக சக்கரத்தின் நிலையை அடைய வைக்கிறாள்.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews