ஒரு டயலாக் இல்லை.. நடிப்பு இல்லை.. மிக்சர் தின்றே ஹிட்டான நாட்டாமை மிக்சர் மாமா.. கே.எஸ்.ரவிக்குமார் உருவாக்கிய சீக்ரெட்!

சினிமாவில் தங்களது அசுரத் தனமான உழைப்பைக் கொடுத்து எப்படியாவது ஒரு சிறு கேரக்டர் கிடைத்து விடாதா நாம் எப்படியும் சினிமாவில் தோன்ற மாட்டோமா என்று எண்ணற்ற இளைஞர்களும், மாடல்களும் தவம் கிடைக்கும் நிலையில் நடித்த ஒரே படத்தில் வசனம் இன்றி, நடிப்பு இன்றி ஒரு சில வினாடிகளே வந்து இன்றளவும் நினைவில் நிற்பவர்தான் நாட்டாமை மிக்சர் மாமா.

1994-ல் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், குஷ்பு, மீனா, விஜயக்குமார் நடிப்பில் வெளியான படம்தான் நாட்டாமை. ஒருவருடத்திற்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை பெற்ற படம். திரையிட்ட இடமெல்லாம் சூப்பர்ஹிட்டாகியது. குறிப்பாக கவுண்டமணி செந்தில் காமெடி படத்தில் தூக்கலாக இருந்தது. இன்றும் இப்படத்தின் காமெடி டிரண்டிங்கில் உள்ளது. இந்தப் படத்தில் கவுண்டமணிக்கு பெண் பார்க்கச் செல்லும் போது பெண்ணின் தந்தை மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.

அப்போது கவுண்டமணி எவன்டா இவன் டம்மியா உட்கார்ந்து வந்ததுல இருந்து மிச்சர் தின்னுக்கிட்டு இருக்கான் என்று சொல்லும் போது வரும் மிக்சர் மாமாவின் ரியாக்சன் இன்றளவிலும் வெகு பிரபலம். கே.எஸ்.ரவிக்குமார் இந்தப் பட ஷுட்டிங்கின் போது இந்தக் காமெடிக் காட்சியில் பெண்ணின் தந்தையாக யாரை நடிக்க வைக்கலாம் என எண்ணியபோது அங்கு ஷுட்டிங்கில் லைட்டிங் பணிகளில் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர்.

இசைஞானியின் குரலுக்கு அப்படியே பொருந்தும் நவரச நாயகன் கார்த்திக்.. இத்தனை ஹிட் பாடல்களா?

இயக்குநர் லைட் எண்களைச் சொல்லும் போது அதை இயக்குவது தான் அவர் வேலை. மற்ற நேரங்களில் அமர்ந்து கடலை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இதனைக் கவனித்த கே.எஸ்.ரவிக்குமார் அந்த சீன் எடுக்கும் போது இவரின் முகம் ஞாபகம் வர அவருக்கு வெள்ளை வேட்டி, சட்டை கொடுத்து நெற்றியில் திருநீற்றுப் பட்டையடித்து டம்மியாக உட்கார வைத்திருக்கிறார்கள். அங்கு என்ன செய்தீர்களோ அதே வேலையை இங்கும் செய்யுங்கள் என்று மிச்சரை கையில் கொடுத்து ஆக்சன் என்று சொன்னவுடன் சாப்பிடுங்கள் என்று கூறியிருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

அப்படி உருவானதான் இந்த மிச்சர் மாமா கதாபாத்திரம். இன்றும் யாராவது சும்மா உட்கார்ந்திருந்தாலோ அல்லது டம்மி பதவியில் இருந்தாலோ அவர்களை இந்த மீம்ஸ் போட்டு கலாய்ப்பது வழக்கமாக இருக்கிறது. ஒரு சில வினாடிகளே வந்தாலும் மறக்காத முகமாகவும் மனதில் பதிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews