நப்பின்னைக்கு வேண்டுகோள் – திருப்பாவை பாடலும்,விளக்கமும் -20

15f2dd8ef5f1a89153bfc641bfad4f57

பாடல்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலையே! துயிலெழாய்
செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

பொருள்

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் (எட்டு வசுக்கள், பதினோரு ருத்திரர்கள், பன்னிரண்டு ஆதித்யர்கள், அஸ்வினி தேவர் இருவர். இந்த 33 தேவர்களுக்கும் தலைக்கு ஒரு கோடி தேவர்கள்) துன்பம் வருமுன்பே அவர்கள் நடுக்கத்தைப் போக்கும் ரட்சகனே! நித்திரை நீங்கி எழுந்திருப்பாய்! பக்தர்களைக் காப்பவனே! தீயோரை அழிக்கும் வலிமையுடையவனே!  பகைவர்களுக்குத் துக்கத்தைக் கொடுக்கும் விமலனே! தூக்கத்திலிருந்து எழுவாயாக! செம்புக் கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களையும், சிவந்த இதழ்களைக் கொண்ட வாயையும், சிறிய இடையையும் கொண்ட திருமகளைப் போன்ற நப்பின்னைப் பிராட்டியே! உறக்கம் நீக்கி எழுந்திரு. நோன்புக்கு வேண்டிய ஆலவட்டம், கண்ணாடி முதலியவற்றைக் கொடுத்து இப்போதே உன் மணாளன் கண்ணனோடு எங்களை நீராட அனுப்பி வை….

விளக்கம்:

கிருஷ்ணனும் எழுந்திருக்கவில்லை; நப்பின்னையும் எழுந்திருக்கவில்லை. நப்பின்னைதான் எழுந்திருக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, கிருஷ்ணனையும் எழுந்திருக்க விடவில்லை. இத்தனைக்கும் முதலில் ஆண்டாள் நப்பின்னையைத்தான் பலவாறாக புகழ்ந்து, கிருஷ்ணனை எழுப்பி அனுப்பச் சொன்னாள். என்னதான் அவளைப் புகழ்ந்தும் கெஞ்சியும் கேட்டும், கிருஷ்ணனை எழுந்திருக்க விடவில்லை. ஒருவேளை கிருஷ்ணனைப் புகழாமல் நப்பின்னையை மட்டும் புகழ்ந்ததால், அவள் இப்படி நடந்துகொள்கிறாளோ என்று எண்ணிய ஆண்டாள், இந்தப் பாடலில் இருவரையுமே புகழ்ந்து பாடி கண்ணனை எழுப்ப சொல்லியும்,கூடவே நோன்புக்காக கண்ணாடி, விசிறியையும் கொடுத்தனுப்ப சொல்லி பெண்கள் கேட்பதாய் அமைந்த பாடல்..

திருப்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews