50 ஆண்டுகளில் இரண்டாவது முறை; உச்சம் தொட்ட முட்டை விலை; இன்றைய நிலவரம் இதோ!

முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தி ரூ.5.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு முட்டையின் விலை 5 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்படுவது 50 ஆண்டுகளில் இதுவே இரண்டாவது முறை என கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அதிக அளவில் முட்டை உற்பத்தி செய்யும் நகரமாக நாமக்கல் மாவட்டம் உள்ளது. இங்குள்ள 1,000 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது.

தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளது. இதனால் கேக் தயாரிப்பு பணிகளுக்காக அதிக அளவிலான முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்றொருபுறம் குளிர்காலத்தை முன்னிட்டு முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதும் விலை ஏற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

இதனால் நேற்று 5 ரூபாய் 40 காசுகளாக இருந்த முட்டை ஒன்றின் பண்ணைக் கொள் முதல் விலை இன்று 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 50 காசுகளாக அதிகரித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகால தமிழக கோழி பண்ணை வரலாற்றில் இது இரண்டாவது முறை ஒரு முட்டையின் விலை ரூ.5.50 காசுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கோழி பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் இந்த விலை இருந்துள்ளது.

வெளிநாடுகளுக்கான உற்பத்தியும், உள்நாட்டு தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயரக்கூடும் என கோழி பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.