Connect with us

நலம் தரும் நரசிம்மரின் 9 வகை திருக்கோலம் பற்றி அறிவோமா?!

ஆன்மீகம்

நலம் தரும் நரசிம்மரின் 9 வகை திருக்கோலம் பற்றி அறிவோமா?!

அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காக்க திருமால் எடுத்த அவதாரங்களில் நரசிம்ம அவதாரமும் ஒன்று. தசாவதாரத்தில் இது 4வது அவதாரமாகும்.இரணியன் இறைவனை நோக்கி கடும் தவம் இருந்து பூமியிலோ அல்லது வானத்திலோ, உள்ளேயோ அல்லது வெளியிலோ தேவர்கள் அல்லதுமனிதர்கள், அரக்கர்கள், மிருகங்கள் போன்ற உயிரினங்களாலோ காலையும் அல்லாது மாலையும் அல்லாது வேளையில், எந்த வித ஆயுதத்தாலும் மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெற்றான்.

be84493d60252e6a2c84aac4cfd67989

தான் பெற்ற வரத்தின் ஆணவத்தால் திருமாலையே எதிர்த்தான். மேலும் ‘நாராயணனே கடவுள்’ என்று சொன்ன தன் மகனையே கொல்ல முயன்றான். தன் பக்தன் பிரகலாதனுக்காக ஒரே நொடியில் தூணைப் பிளந்து கொண்டு அவதரித்த நரசிம்மர், இரணியனை தன் மடியில் கிடத்தி கூரிய நகங்களால் வயிற்றைக் கிழித்து அவனை வதம் செய்தார். உக்கிரம் கொண்ட நரசிம்மரை பிரகலாதன் சாந்தம் கொள்ளச் செய்தான். உக்கிரம் நீங்கிய நரசிம்மர் லட்சுமியை மடியில் அமர்த்தி லட்சுமிநரசிம்மராக காட்சிக்கொடுத்தார். நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த இடம், ஆந்திராவில் உள்ள அகோபிலம் ஆகும்.

‘அகோ’ என்றால் ‘சிங்கம்’, ‘பிலம்’ என்றால் ‘குகை’ என்று பொருள். நரசிம்மர் இத்தலத்தில் குகைக்குள் காட்சியளிப்பதால் இக்கோவிலுக்கு ‘அகோபிலம்’ என்று பெயர் வந்தது.

6da3529846628f966832ea52ed438c23

அகோபிலம் என்ற திவ்யதேசம் ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் இருக்கிறது. கடப்பாவில் இருந்து 112 கி.மீ. தூரம். தமிழ்நாட்டில் இருந்து அகோபிலம் செல்ல சென்னையில் இருந்து கடப்பாவுக்கு செல்லும் ரயில் அல்லது பேருந்தில் சென்று, அங்கிருந்து அல்லகட்டா வழியாக அகோபிலத்துக்கு பேருந்து அல்லது வேன் மூலமாகச் செல்லலாம்.

திருமாலின் நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க விரும்பிய கருடன், கடும் தவம் இருக்க பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார். கருடன் வழிபட்ட ஒன்பது நரசிம்ம மூர்த்திகளும் சுயம்பு வடிவங்களே. இந்த நவ நரசிம்மர்களை நவக்கிரகங்கள் வழிபட்டிருக்கின்றன. எனவே நவ நரசிம்மர்களை வழிபட்டால், நவக்கிரகங்களின் அனுக்கிரகமும் கிடைக்கும் என்கிறார்கள்.

ஒன்பது நவ நரசிம்மர்களையும் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

அகோபில நரசிம்மர்

பவன நதிக்கரையில் அமைந்திருக்கும் குகை ஆலயத்தில் வீற்றிருக்கிறார் இந்த நரசிம்மர். இவர் உயர்ந்த பீடத்தில் சுமார் 2 அடி உயரத்தில், சாலகிராம வடிவில் சுயம்புவாக அருள்கிறார். உக்கிர நரசிம்ம சுவாமியான இவர், ஒரு காலை மடித்து மற்றொரு காலை கீழேவிட்டு தொடை மீது இரணியனை படுக்க வைத்து, இரண்டு கைகளால் வயிற்றைக் கிழிக்கும் தோற்றத்தில் காட்சி தருகிறார். இந்த நரசிம்மரை வழிபாடு செய்தால் சுக்ரனால் ஏற்படும் பாதிப்புகள் அகலும்.

48705ddc6d65f8ada244b12e3380a31d

மாலோல நரசிம்மர்

இவரைக் காண மலையில் நடந்து செல்ல வேண்டும். கனகப்யா ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது இந்த நரசிம்மர் ஆலயம். ‘மா’ என்றால் லட்சுமி என்றும், ‘லோ’ என்றால் காதல் என்றும் பொருள். அன்னையை தன் இடதுமடியில் அமர வைத்துக்கொண்டு இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு சுகா ஆசனத்தில் வீற்றிருக்கிறார், இந்த நரசிம்மர். வலது மேல் கரத்தில் சக்கரம், இடது மேல் கையில் சங்கு, வலது கீழ்கரத்தில் அருள்புரியும் அபயஹஸ்தம், இடது கீழ்க்கரம் மகாலட்சுமியை சுற்றி வளைத்திருக்கிறது. இந்த நரசிம்மர் செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள்பவர்.

ஜ்வாலா நரசிம்மர்

மேல் அகோபிலத்தில் இருந்து 3½ கி.மீ தொலைவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் வேதாசலம், கருடாசலம் மலைகளுக்கு நடுவே இந்த நரசிம்மர் அருளும் கோவில் உள்ளது. அசலாசல மேரு என்னும் மலைப்பகுதியில் ஜ்வாலா நரசிம்மரை தரிசிக்கச் செல்லும் வழி மிக சிரமமானது. இந்த சுவாமி மூன்று மூர்த்திகளாக தரிசனம் தருகிறார். மத்தியில் உக்கிர ரூபமாய் நரசிம்மர் எட்டுத் திருக்கரங்களுடன் இடது காலை மடக்கி வலது காலைத் தொங்கவிட்டு மடியில் இரணியனை வைத்துக்கொண்டிருக்கிறார். இரண்டு கரங்களில் சங்கு, சக்கரமும், இரண்டு கரங்கள் வயிற்றை கிழிப்பது போலவும், மற்ற கரங்கள் அவனது உடல் அங்கங்களை அசையாதபடி பற்றிக்கொண்டும் காட்சி தருகிறது. இந்த சிலைக்கு வலதுபுறம் அவதார சமயத்தில் நரசிம்மரின் தோற்றமும், இடதுபுறம் இரணியனுடன் போர்புரிவது போன்ற சிலையும் காணப் படுகின்றன. இந்த நரசிம்மர் சனி பகவானின் தோஷங்களை போக்குகிறார்.

பார்கவ நரசிம்மர்

கீழ் அகோபிலத்தில் இருந்து மேல் அகோபிலத்திற்கு செல்லும் பாதையில் 2 கி.மீ. தொலைவில் சிறுகுன்றின் மேல் இந்த நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயம் உள்ளது. 130 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். படி ஏறும் முன் பார்கவ தீர்த்தக் குளத்தைக் காணலாம். பார்கவ ரிஷி பரந்தாமனை தரிசிக்க இங்கு வந்ததாகவும், அவருக்கு தசவதாரத் தோற்றங்கள் அனைத்தையும் ஒருசேர இறைவன் காட்டியதாகவும் கூறப்படுகிறது. சன்னிதியில் பார்கவ நரசிம்மர் மேல் இரண்டுகரங்களில் சங்கும், சக்கரமும், கீழ் கரங்களில் இரணியனை தன் மடியில் கிடத்தி அவனை வதம் செய்யும் தோரணையில் வீற்றிருக்கிறார். சந்திரனால் ஏற்படும் தோஷங்களை போக்குபவர் இவர்.

d5e2b05578fc7efb028339bed145fdf6

பாவன நரசிம்மர்

கருடாத்ரி மலைக்கு தென்புறம் அடர்ந்த காட்டுப்பகுதியில் பவன நதிக்கரையில் இந்த நரசிம்மர் கோவில் உள்ளது. மிககடினமான பாதை. நடைப்பயணம் அல்லது ஜீப்பில் மிக சிரமத்துடன் தான் பயணிக்க வேண்டும். கருவறையில் பாவன நரசிம்மர், ஆதிசேஷன் குடைபிடிக்க கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியும், தாயாரை அரவணைத்து அபய முத்திரை காட்டியபடியும் 4 கரங்களுடன் திகழ்கிறார். இவரது சன்னிதியில் வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், கோபால கிருஷ்ணன், ஆஞ்சநேயர் உள்ளனர். பரத்வாஜ மகரிஷி, தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிப்கொள்ள இங்கு தியானம் செய்ததாக கூறப்படுகிறது. இவரை வணங்குவோருக்கு பாவங்கள் விடுபட்டு அனைத்து நலங்களையும் வளங்களையும் அடைவார்கள் என்று ஆழ்வார்கள் கூறியுள்ளனர். ராகு கிரகத்தால் ஏற்படும் தோஷங்களை இந்த நரசிம்மர் தீர்ப்பாராம்.

யோகநந்த நரசிம்மர்

கீழ் அகோபிலத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் இந்த நரசிம்மர் ஆலயம் இருக்கிறது. இங்கு வீற்றிருக்கும் யோக நந்த நரசிம்மர், தனது மேல் இரண்டு கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கியும், கீழ் இரு கரங்களை யோக முத்திரையில் வைத்தபடியும் காட்சி தருகிறார். இந்த நரசிம்மர், தனது பக்தனான பிரகலாதனுக்கு சில யோக மந்திரங்களையும், முத்திரைகளையும் கற்றுக்கொடுத்தவர் என்று சொல்லப்படுகிறது. இந்த நரசிம்மரை வழிபட்டால் புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

சத்ரவட நரசிம்மர்

கீழ் அகோபிலத்தில் இருந்து கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது, இந்த நரசிம்மர் கோவில். இரண்டு கந்தவர்கள் நரசிம்மரைத் துதித்து இனியபாடல்கள் இயற்றி பாடி வர, அந்த சங்கீதத்தை பாராட்டுவதற்காகவே பெருமாள் இங்கு தோன்றினாராம். இங்குள்ள நரசிம்மர், இரண்டு கரங்களில் சங்கு சக்கரமும், மற்ற இரு கரங்களில் ஒரு கரத்தில் அபயமுத்திரையோடும், மற்றொரு கரத்தைக் கொண்டு சங்கீதத்தை கேட்டபடி தாளம் போடுவது போன்ற பாவனையிலும் வைத்திருக்கிறார். சங்கீதத்தில் முன்னேற்றம் காண விரும்புபவர்கள் இந்த நரசிம்மரை வழிபட்டுச் செல்கிறார்கள். மேலும் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்களை இந்த நரசிம்மர் போக்குகிறார்.

d4daf5175b120baef00a31a0667437c3

வராக நரசிம்மர்

இந்தக் கோவில் மேல் அகோபிலத்திற்கு 1 கி.மீ. தொலைவில் பவன நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் வராக நரசிம்மர், தனது இரண்டு கரங்களை இடுப்பில் தாங்கி, நின்றபடியும், பூமாதேவியை அரவணைத்தது போன்ற தோற்றத்திலும் காணப்படுகிறார். இந்த நரசிம்மரை வணங்கினால் குரு பகவானால் ஏற்படும் தோஷங்கள் அகலும்.

காரஞ்ஜ நரசிம்மர்

இந்தக் கோவில் கீழ் அகோபிலத்தில் இருந்து மேல் அகோபிலத்திற்கு செல்லும் மார்க்கத்தில் 7 கி.மீ. தொலைவில் சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. நரசிம்மர் வலது கையில் சுதர்சன சக்கரத்தோடும், இடது கையில் சங்குக்கு பதிலாக வில் ஏந்தியபடியும் தரிசனம் தருகிறார். மற்ற இரண்டு கை தியான முத்திரையோடு இருக்கிறது. மண்டபத்தில் இடதுபுறத்தில் ஆஞ்சநேயர் நரசிம்மரை நோக்கி வணங்குவது போன்ற காட்சி காணப்படுகிறது.

ஒரு முறை கருங்காலி மரத்தின் கீழ் ராமனை நினைத்து அனுமன் தவம் இருந்தார். அப்போது நரசிம்மர் வில்லுடன் தோன்றி ‘நான்தான் ராமர்’ என்றார். அனுமன் அவரை ராமனாக ஏற்றுக்கொள்ள மறுத்தார். உடனே ராமனாக வில்லேந்தி அழகிய தோற்றத்தில் காட்சிக்கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நரசிம்மரை வணங்கினால் கேது கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in ஆன்மீகம்

To Top