ரஷ்ய அரசுக்கு சொந்தமான ரூ.2.5 கோடி மதிப்புள்ள கிரிப்டோ கரன்சியை மர்ம ஹேக்கர் ஒருவர் திருடி அதை உக்ரைன் நாட்டில் உள்ள தன்னார்வலர்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
தற்போது ஹேக்கர்களின் குறி கிரிப்டோ கரன்சியில் தான் இருக்கிறது என்றும் கிரிப்டோகரன்சியை திருடி விற்பனை செய்யும் செயல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஷ்ய அரசுக்கு சொந்தமான பல்வேறு அமைப்புகளில் இருந்த மூன்று லட்சம் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி மர்ம ஹேக்கர் ஒருவரால் திருடப்பட்டு உள்ளது. இந்திய மதிப்பில் ரூபாய் 2.5 கோடி மதிப்புடைய இந்த கிரிப்டோகரன்சி பணமாக மாற்றப்பட்டு அந்த பணம் முழுவதும் உக்ரைன் நாட்டில் உள்ள தன்னார்வலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த பணத்தை வைத்து ரஷ்ய போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொள்ளும்படி மர்ம ஹேக்கர்செய்தி அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரஷ்யாவில் உள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள் குழுவில் இந்த மர்மநபர் ஊடுருவி இருப்பதாகவும் ரஷ்ய அரசுக்கு சொந்தமாக எந்தெந்த அமைப்புகளில் எவ்வளவு கிரிப்டோ கரன்சி இருக்கிறது என்பதை அறிந்து அதை மட்டும் மிகச் சரியாக ஹேக்கிங் செய்து அந்த நபர் திருடி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவலை ரஷ்யா இன்னும் உறுதி செய்யவில்லை என்றாலும் உக்ரைன் நாட்டில் உள்ள தன்னார்வலர்கள் தங்களுக்கு பணம் வந்துள்ளது உறுதி செய்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி என்பது பாதுகாப்பான முதலீடு இல்லை என ஆரம்பம் முதலே முதலீட்டு ஆலோசர்கள் கூறிவரும் நிலையில் தற்போது மேலும் ஒரு கிரிப்டோ கரன்சி ஹேக்கர்களால் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.