காமன்வெல்த் 2022: நீளம் தாண்டுதலில் முதல் முறையாக வெள்ளி வென்று இந்தியா அசத்தல்!

காமன்வெல்த் போட்டியில் ஆடவர் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகின்றன. காமன்வெல்த் போட்டியின் 7-வது நாளில் பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் கலந்துக் கொண்டு விளையாடி வருகின்றனர்.

இன்றைய போட்டியில் ஆடவர் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் மற்றும் பஹாமாஸ் வீரர் லகுவான் லைர்ன் ஆகியோரின் சிறந்த தாண்டுதல் நீளம் 8.08 மீட்டர் என ஒரே அளவில் இருந்தது. இதனால் அவர்களின் இரண்டாவது சிறந்த தாண்டுதல் உயரம் கணக்கில் எடுக்கப்பட்டது. லகுவான் லைர்னின் இரண்டாவது சிறந்த தாண்டுதல் நீளம் 7.98 மீட்டர் மற்றும் முரளி ஸ்ரீசங்கரின் இரண்டாவது சிறந்த தாண்டுதல் நீளம் 7.84 மீட்டர் ஆகும். இதனால் பஹாமாஸ் வீரர் லகுவான் லைர்ன் தங்கப் பதக்கமும் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

தென் ஆப்ரிக்காவின் ஜோவன் வான் வுரென் 8.06 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டியில் நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் ஆவார். இதற்கு முன்பு 1978-ஆம் ஆண்டு சுரேஷ் பாபு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.