கொல்கத்தா அணி ஐபிஎல் ஜெயிச்சும்.. உற்சாகத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்.. பின்னணி என்ன?..

ஐபிஎல் தொடர் என்றாலே பலம் வாய்ந்த அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு பிறகு தற்போது இடம் பிடித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. கடந்த 2012 மற்றும் 14 ஐபிஎல் சீசன்களில் கௌதம் கம்பீர் தலைமையில் சிறப்பாக ஆடி இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்று பட்டையை கிளப்பி இருந்த கொல்கத்தா, தற்போது ஷ்ரேயஸ் ஐயரின் தலைமையில் மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பைக்கு சொந்தக்காரர்கள் ஆகியுள்ளனர்.

மேலும் முதல் இரண்டு முறை கேப்டனாக இருந்து கோப்பையை வென்று கொடுத்த கம்பீர், இந்த சீசனில் ஆலோசராக மீண்டும் இணைந்து வந்த வேகத்திலேயே கோப்பையை கைப்பற்ற உதவியுள்ளார். அது மட்டுமல்லாமல் பயிற்சியாளர்கள் அபிஷேக் நாயர், பரத் அருண், சந்திரகாந்த் பண்டித் உள்ளிட்ட அனைவரும் நல்ல பங்களிப்பை தொடர்ந்து கொடுத்ததால் வீரர்களும் அதற்கேற்ப சிறப்பாக ஆடி இந்த சீசனில் எந்த தவறையும் செய்யாமல் கொல்கத்தா அணி கோப்பையை வெல்லவும் உதவி இருந்தனர்.

தங்களின் பேட்டிங் ஆர்டர் மூலம் பல அணிகளை அச்சுறுத்தி வந்த ஹைதராபாத்தின், ஆட்டம் கொல்கத்தா அணிக்கு எதிராக குவாலிபயர் 1 மற்றும் இறுதிப் போட்டியிலும் அரங்கேறாமல் போனது. இரண்டு போட்டியிலும் கொஞ்சம் கூட ஆதிக்கம் செலுத்த முடியாமல் தோல்வியடைந்த ஹைதராபாத் அணி, மனம் உடைந்து தான் இந்த போட்டியில் தோல்வி அடைந்திருந்தது.

முதலில் பேட்டிங் செய்த அவர்கள், கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்ட அனைவரும் அதிரடி காட்டியதால் 11 வது
ஓவரிலேயே இலக்கை எட்டி அசத்தியிருந்தனர். ஸ்டார்க், ரசல், வெங்கடேஷ் ஐயர் என அணியில் இருந்த அனைவரது பங்களிப்பும் அதிகமாக இருக்க கொல்கத்தா அணியும் எந்தவித நெருக்கடியும் இன்றி கோப்பையை கைப்பற்றியது. மூன்றாவது முறையாகக் கோப்பை வென்றதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு அடுத்தப்படியாக அதிகமுறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இதனிடையே கொல்கத்தா கோப்பையை வென்றதன் காரணமாக மும்பை ரசிகர்கள் உற்சாகத்தில் இருப்பதற்கான காரணத்தை தான் தற்போது பார்க்க போகிறோம். கடந்த 2012 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி கோப்பையை வென்றிருந்த நிலையில், அதற்கடுத்த சீசனில் 2013 ஆம் ஆண்டு மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.

இதேபோல 2014 ஆம் ஆண்டு கொல்கத்தா கோப்பையை வெல்ல, அதற்கடுத்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தது. இப்படி கொல்கத்தா ஜெயித்த அடுத்த சீசனில் எல்லாம் மும்பை கோப்பை வென்றதால் தற்போது மூன்றாவது முறையாக கொல்கத்தா அணி வென்றுள்ள சூழலில் அடுத்த சீசனில் மும்பை அணி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் கோப்பையை சொந்தமாக்கும் என ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...