நாளை கரையை கடக்கிறது மோக்கா புயல்.. எங்கெல்லாம் மழை பெய்யும்?

வங்க கடலில் தோன்றிய மோக்கா புயல் நாளை கரையை கடக்க இருப்பதால் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியது என்பதும் அதில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதன் பின் புயலாக மாறியது என்பதையும் பார்த்தோம். மோக்கா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல் மணிக்கு 15 முதல் 25 கிலோமீட்டர் வரை வடக்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்தது. இந்த புயல் வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில் தற்போது அந்த பகுதியை நோக்கி நான் சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை மோக்கா புயல்  கரையை கடக்கும் போது மணிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என்றும் அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்ப்பட்டுள்ளது. இதனை அடுத்து புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதியில் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் பொதுமக்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு நாடுகளில் புயல் கரையை கடக்கும் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மோக்கா புயல் காரணமாக தமிழகத்தில் பெரும் பாதிப்பு இருக்காது என்றாலும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதேபோல் ஆந்திரா ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மோக்கா புயல் கரையை கடந்ததும் அக்னி நட்சத்திர வெயில் உக்கிரமாக இருக்கும் என்றும் வழக்கத்தைவிட நான்கு முதல் ஐந்து டிகிரி வரை வெப்பம் அதிகமாக பதிவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே நாளை மோக்கா புயல் கரையை கடந்ததும் நாளை மறுநாள் முதல் பொதுமக்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பித்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.