பவர் கட் பற்றி இனி கவலை இல்ல… செந்தில் பாலாஜி சொன்ன நல்ல செய்தி!
தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகம் வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இரவுகளில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மின் தடை குறித்து விளக்கமளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்த 2 மாதங்களுக்கான மின் தேவைக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி பெற 2 நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளதாக கூறினார். அதானி நிறுவனத்திற்கு நிலக்கரி ஒப்பந்தம் வழங்கப்படவில்லை எனவும் அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.
மின் தடைகளை நாளையே சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஓரிரு நாட்களில் தமிழகத்தில் மின்தடை என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்றும் உறுதியளித்தார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 796 மெகாவாட் மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய நடவடிக்கையால், தகுந்த மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாநிலத்தில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதாகவும், அதன் மூலம் இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
