News
ஆதார்-பான்கார்டு இணைப்பு குறித்த முக்கிய தகவல்

ஆதாருடன் பான்கார்டை இதுவரை 30 கோடி பேர் இணைத்துள்ளதாகவும், இன்னும் 17 கோடி பேர்களுக்கும் மேல் இணைக்க வேண்டியது இருப்பதாகவும் மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் நேற்று மக்களவையில் கூறியதாவது: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கடந்த ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் மார்ச் 31-ஆம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 27-ஆம் தேதி நிலவரப்படி 30.75 கோடி பேர் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனா்.
17.58 கோடி பேரின் பான் எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை. அவா்களும் பான் எண்ணை இணைப்பதற்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் ஆதார், பான் குறித்த விவரங்கள் பொது வெளியில் கசியாமல் இருக்கும் நோக்கில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
