முதல்வரிடம் இருந்து அன்பில் மகேஷுக்கு பறந்த போன் கால்; அவையில் வெடித்த காரசார விவாதம்!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீண்ட நெடிய விளக்கமளித்துள்ளார்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் தயவு செய்து பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வையுங்கள். அவர்களை காக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையது என பெற்றோர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் வைத்தார்.

12-ம் வகுப்பு மாணவர்கள் அதிக அளவில் பொதுத்தேர்வில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து சட்டப்பேரவையில் அதிமுக, சிபிஐ, காங்கிரஸ், பாமக, உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

அன்பில் மகேஷ் விளக்கம்:

அப்போது பேசிய முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான செங்கோட்டையன் பேசுகையில், “12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 50,000 -க்கும் மேற்பட்டோர் எழுதவில்லை என செய்திகளில் படித்தேன். பல மாணவர்கள் பாலிடெக்னிக் சென்றுவிட்டதாக எல்லாம் அமைச்சர் சொன்னதாக செய்தி படித்தேன். போன ஆண்டு 40,000 பேர் எழுதவில்லை. இந்த ஆண்டு 50,000 பேர் எழுதவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர்கள் இடைநிற்றல் இல்லாத நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும். இவ்வளவு பேர் ஏன் எழுதவில்லை என்பதை அரசு கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.

பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசுகையில், “12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொழிப்பாட தேர்வு எழுதவே மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற பாடங்களும் முக்கியம் தான். இருந்தாலும் மொழிப்பாடம் முக்கியத்துவம் பெறும் வகையில் தமிழ் மொழி கட்டாயம் படிக்க வேண்டும். இதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.

முதல்வர் செய்த போன் கால்:

த.வேல்முருகன் பேசுகையில், “இவ்வளவு மாணவர்கள் தேர்வு எழுதாதது பொத்தாம் பொதுவாக கூறப்பட்டிருக்கிறது. அதில் தனியார் பள்ளி மாணவர்களா? அரசு பள்ளி மாணவர்களா?. இவ்வளவு கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தும் ஏன் இந்த இடைநிற்றல் என பள்ளிக்கல்வித்துறை கண்டறிய வேண்டும்”, என்றார்.

இதற்கு விளக்கமளித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “படிக்காத மேதை ஒருவரை காட்டினேன் என்று யாராவது சொன்னால் படித்த லட்சம் பேரை காட்டுவேன் என்று சொன்னவர் நம்முடைய முதலமைச்சர். 16 வயதில் பிள்ளை வேலைக்கு போனால் பெற்றவர்கள் சரி இல்லை, 61 வயதில் பெற்றோர் வேலைக்கு போனால் பிள்ளை சரியில்லை. என இவை இரண்டுமே நடந்து விடக்கூடாது என்ற சொன்னவர் முதலமைச்சர்.  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வது மட்டும் கடமை இல்லை என சொன்னவர் முதலமைச்சர். ஏன் இவ்வளவு மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தொலைபேசி வாயிலாக முதல் ஆளாக முதலமைச்சர் தான் என்னிடம் கேட்டார்.

பல்வேறு சலுகைகளை பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது மாணவர்கள் தேர்வு ஏன் எழுதவில்லை என அனைவர் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது.

இடைநிற்றல் விகிதம்:

12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு பட்டியல் தயாரிக்கும் போது குறைந்தபட்சம் வருகை பட்டியல் 75% இருக்க வேண்டும்.

கற்றல் கையேடுகள் வழங்குதல், உடல்நலம் மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்குதல், நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக மாணவர்களுக்கு ஆர்வமூட்டி உயர்கல்விக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும்.

சமூக பொருளாதார காரணங்களால் 12-ம் வகுப்பு மாணவர்கள் 10-ம் வகுப்பில் அனைவருக்கும் தேர்ச்சி பெற்றவர்களே கொரோனாவுக்கு பின் சமூக பொருளாதாரம் காரணமாக மாணவர்கள் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்பட்டு அவர்களுக்கு பதிவு பட்டியலில் இடம் கொடுக்கப்பட்டது.

மீண்டும் நீண்ட காலம் வருகை புரியாத மாணவர்களையும், இடைநிற்றல் உள்ள மாணவர்களையும், இடைநிற்றல் இல்லாமல் இருக்க பள்ளியில் இருந்து முழுமையாக வெளியேறாமல் இருக்கவும் சிறப்பு நிகழ்வாக மேற்க்கொள்ளப்பட்டது.

வருகை பதிவேட்டில் எவ்வித கட்டுப்பாடும் கடைபிடிக்காமல் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும். தேர்வு எழுதாத மாணவர்கள், பெற்றோர்களுக்கு துணை தேர்வின் அவசியத்தை விளக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

ஒரு வாரத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் மாணவர்களின் விவரப்பட்டியல் வாயிலாக கண்காணிக்கப்பட்டு தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

EMIS – பதிவில் மூன்று வாரத்தில் 9 நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் மாவட்ட அதிகாரிக்கு அனுப்பப்பட்டு அவர்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோர்கள் சமுதாய பொருளாதாரம் கண்டறியப்பட்டு முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 12-ம் வகுப்பு வரக்கூடிய மாணவர்களையும் குழந்தைகள் என்று செல்வதற்கு காரணம் அவர்களையும் குழந்தைகள் என்ற எண்ணத்தில் நடந்து கொள்வதால் தான்.

வகுப்பறைக்குச் சென்று மதிப்பெண் வாங்குவது மட்டுமே நம்மை மதிப்பீடு செய்யாது. வாழ்க்கையில் தனித்திறமையை வளர்த்துக் கொள்வது தான் உங்களை மதிப்பீடு செய்யும். தயவு செய்து பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வையுங்கள். அவர்களை காக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையது”, என நீண்ட நெடிய விளக்கத்தை அளித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.