ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி; விரைவில் அதிரடி மாற்றம்!

இந்திய முழுவதும் தனது கட்டணங்களை மீண்டும் உயர்த்த ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் வாடிக்கையாளர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனம் 28 நாள் மொபைல் போன் சேவை திட்டத்திற்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் விலையை சுமார் 57 சதவீதம் அதிகரித்து ஹரியானா மற்றும் ஒடிசாவில் ரூ.155 ஆக உயர்த்தியுள்ளதாக நிறுவனத்தின் இணையதளம் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்காக வழங்கப்பட்டு வந்த குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டமான ரூ.99ஐ நிறுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏர்டெல் நிறுவனம்  வினாடிக்கு ரூ.2.5 பைசா என்ற விகிதத்தில் 200 மெகாபைட் டேட்டா மற்றும் அழைப்புகளை வழங்கி வந்தது. 

 ஹரியானா மற்றும் ஒடிசாவில், ஏர்டெல் இப்போது வரம்பற்ற அழைப்பு, 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்களுடன் ரூ.155-திட்டத்தை வழங்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் ஆலோசித்து வருவதாகவும், விரைவில் 155 ரூபாய்க்குக் குறைவான எஸ்எம்எஸ் மற்றும் டேட்டாவுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏர்டெல் நிறுவனம் தனது 99 ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் ரூ.99 டாக் டைம் மதிப்பையும், 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 200 எம்பி டேட்டாவையும் வழங்கி வந்தது. இதனை தற்போது 155 ரூபாயாக உயர்த்த உள்ளது. அத்துடன் வரம்பற்ற வாய்ஸ் கால்கள், 300 எஸ்எம்எஸ்கள், 1ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்க உள்ளது.

இதற்கு முன்னதாக ஏர்டெல் நிறுவனம் 2021ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் தனது குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை ரூ. 79 இலிருந்து ரூ. 99 ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.