முன்பெல்லாம் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் உள்ளது, பாடல்கள் உள்ளது என கூறி மாதர் சங்கத்தினர் தான் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் சமீபகாலமாக ஆண்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல படங்களில் காதல் தோல்வி காரணமாக பெண்களை திட்டி ஆண்கள் பாடும் விதமாக பாடலும் பாடல் வரிகளும் இடம் பெற்றிருக்கும்.
தற்போது அதற்கு மாறாக ஆண்களை தவறானவர்கள் என்பது போல் சித்தரிக்கும் வகையில் பாடல்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக புஷ்பா படத்தில் சமந்தா குத்தாட்டம் போட்ட ஊ சொல்றியா மாமா பாடலில் ஆண்கள் அனைவரும் வக்கிரபுத்தி கொண்டவர்கள் என்பதுபோல பாடல் வரிகள் இடம் பெற்றிருந்தது. இதற்கு ஆண்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து பதிவு நடத்தினார்கள்.
தற்போது நடிகை ரெஜினா ஆடியுள்ள பாடலுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதன்படி தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ஆச்சாரியா படத்தில் இடம்பெற்றுள்ள சானா கஷ்டம் என்ற பாடலுக்கு நடிகை ரெஜினா நடனமாடி உள்ளார். இந்நிலையில் இந்த பாடலுக்கு தான் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அதாவது இந்த பாடலில் இடம் பெற்றிருக்கும் வரிகளில் இன்றைய இளைஞர்கள் பலரும் ஆர்எம்பி மருத்துவராக விரும்புவதாகவும், அதற்குக் காரணம் அவர்களுக்கு அழகு சிகிச்சை என்ற பெயரில் பெண்களை அதுவும் குறிப்பாக சினிமா நடிகைகளின் உடலை தொட்டு பார்க்கும் எண்ணம் தான் என்பது போல உள்ளதாம்.
இந்நிலையில் இந்த பாடல் வரிகள் தங்கள் துறையை மோசமாக சித்தரிப்பதாக கூறி ஆர்எம்பி மருத்துவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இப்பாடல் வரிகளை அகற்றவேண்டும் என்றும், தங்களை காயப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.