120 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா உலக சாதனை படைத்துள்ளது. உலகமே இந்தியாவை திரும்பி பார்த்ததற்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது தடுப்பூசி முகாம்கள் தான்.
நம் தமிழகத்தில் வாரத்திற்கு இரண்டு முறை தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. முன்பு தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் சனிக்கிழமைக்கு தடுப்பூசி முகாம் மாற்றப்பட்டு ஏராளமான அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இந்த நிலையில் டிசம்பர் 4ஆம் தேதி சனிக்கிழமை தடுப்பூசி முகாம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலைநகரான சென்னையில் டிசம்பர் 4ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதன்படி சென்னையில் 13வது மெகா தடுப்பூசி முகாம் டிசம்பர் 4 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 1600 முகாம்கள் அமைக்கப்பட்டு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.