ஆண்டுக்கு ரூ.29 கோடி வருமானம்… மகளின் சரும பிரச்சனைக்காக கோவை பெண் தயாரித்த சோப் கோடிகளை கொட்டும் பிசினஸ் ஆனது எப்படி?

வீட்டில் சுத்தமாகவும், ரசாயன கலப்பு இல்லாமலும் தயாரிக்கப்படும் உணவு வகைகள், மசாலா வகைகளைப் போலவே சோப்பு, ஷாம்பு, ஃபேஸ்பேக் பவுடர்கள், வாஷிங் பவுடர் என ஹோம் மேட் தயாரிப்புகளுக்கு மவுசு கூடிவருகிறது. அந்த வகையில் கோவையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் மகளின் சருமப்பிரச்சனைக்காக தானே சோப்பு தயாரிக்க ஆரம்பித்து தற்போது அதனை கோடிகளில் லாபம் கொட்டும் பிசினஸாக மாற்றியுள்ளார்.

மகளின் சரும பிரச்சனை:

கோயம்புத்தூரைச் சேர்ந்த கிருத்திகா குமரன் தனது மகள் சரும பிரச்சனையுடன் கஷ்டப்பட்டுவதை தாங்கிக்கொள்ள முடியாமல், வீட்டிலேயே இயற்கையான மற்றும் பாரம்பரிய மூலிகைகளைக் கொண்டு துளிகூட கெமிக்கல் இல்லாத சோப்பை தயாரித்துள்ளார்.

“நான் யூடியூப்பில் வீடியோக்களைப் பார்த்து சோப்புகள் தயாரிக்க கற்றுக்கொண்டேன், மேலும் எனது அறிவை மேம்படுத்த இரண்டு மாத கால அழகுசாதனவியல் டிப்ளமோ படிப்பையும் முடித்தேன்” என்கிறார் கிருத்திகா.

கிருத்திகா தனது சமையலறையில் தயாரித்த இந்த ஹேண்ட் மேட் சோப்பு மகளின் சரும பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமைந்ததோடு, இதையே ஏன் ஒரு பிசினஸாக நாம் தொடங்கக்கூடாது என்ற எண்ணத்தையும் இல்லத்தரசியான கிருத்திகாவிற்கு கொடுத்துள்ளார்.

அதனையடுத்து சுமார் 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் வீட்டிலேயே சோப்பு தயாரிக்கும் பணியை ஆரம்பித்த கிருத்திகா, இன்று “வில்வா” (Vilvah) என்ற தனி பிராண்டையே உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

வில்வா பிராண்ட் உதயம்:

சிவபெருமானின் வில்வ மரத்தை குறிக்கும் விதமாக தனது பிராண்டிற்கு “வில்வா” என பெயர் வைத்துள்ள கிருத்திகா, வெறும் 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட சோப் பிசினஸை தற்போது ஆண்டுக்கு 29 கோடி ரூபாய் வருமானம் கொட்டக்கூடிய தொழிலாக மாற்றியுள்ளார்.

வீட்டின் சமையலறையில் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரே ஒரு சோப் தயாரிக்கும் பணி, கிருத்திகாவின் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் பலனாக 70 வகையான சரும பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு சாதனங்களைக் கொண்ட பிராண்டாக விஸ்வரூப வளர்ச்சி அடைந்துள்ளது.

தற்போது வில்வா பிராண்ட் தயாரிப்புகள் சென்னை மற்றும் கோவையில் உள்ள கடைகள், இயற்கை அங்காடிகளில் மட்டுமின்றி ஆன்லைன் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

யார் இந்த கிருத்திகா?

தமிழ்நாட்டின் சிறிய விவசாய நகரமான கோபிசெட்டிபாளையத்தில் பிறந்தவர் கிருத்திகா குமரன். அவரது தந்தை ஒரு வழக்கறிஞர், தாய் இல்லத்தரசியாகவும் இருந்துள்ளார்.

கிருத்திகா குமரன் தனது பள்ளிப் படிப்பை ஸ்ரீ வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர் 2007ம் ஆண்டு கோவையில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் பி.டெக் இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பில் பட்டம் பெற்றார்.

கல்லூரி படிப்பை முடித்த கையோடு 21 வயதில் கிருத்திகாவிற்கும், எம்பிஏ பட்டதாரியான தமிழ் குமரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கணவர், குழந்தைகள் என இல்லத்தரசியாக குடும்பத்தைக் கவனித்து வந்த கிருத்திகா, 2017ம் ஆண்டு தனது சொந்த தொழிலான வில்வா பிராண்டை உருவாக்கியுள்ளார்.

“குடும்பத்தில் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டிருந்த என் கணவர், சோப்பிற்கான ஆர்டர்கள் அதிகரிக்க ஆரம்பித்ததால் எனக்கு உதவ ஆரம்பித்தார். தற்போது இருவரும் இணைந்து தான் இந்த தொழிலை செய்து வருகிறோம்”

வில்வா பிராண்ட் விற்பனையில் கிருத்திகாவின் கணவர் தமிழ் குமரன் நிதி மேலாண்மை, வணிக நிர்வாகம் போன்றவற்றில் அவருக்கு உதவியாக இருக்கிறார். கிருத்திகா தயாரிப்பை மேற்பார்வையிடும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.