மீனம் அதிசார கும்ப சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

உள்ளம் முழுவதும் ஆன்மீகத் தேடலை வைத்துக் கொண்டு சரியான குருவை தேடிக் கொண்டிருக்கும் மீன ராசி அன்பர்களே! உங்களுக்கு இந்த வருடமும் அடுத்த இரண்டு ஆண்டுகளும் உங்கள் மன உறுதியை அதிகப்படுத்தும் விதமான காலமாக இருக்கப் போகிறது.

இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஏழரைச் சனியின் முதல் பகுதியான விரையச் சனி காலமாக ஆரம்பமாகி இருக்கிறது. எனவே இந்த வருட முதல் அடுத்த எட்டு ஆண்டுகள் வரை நீங்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை கைவிட வேண்டும். மது அருந்துவதை நிறுத்த வேண்டும். அதன்பிறகு சனி பகவானின் குரு என்று போற்றக்கூடிய காலபைரவரை தினமும் துதித்து ஜெபித்து வழிபட்டு வாருங்கள். இதன் மூலமாக 2025இல் உங்களுக்கு வர இருக்கும் ஜென்ம சனி காலம் நிம்மதியான காலமாக இருக்கும் .

கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் அளவற்ற செல்வ வளத்தையும் யோகத்தையும் நன்மைகளையும் வாரி வழங்கிக் கொண்டு இருந்து இருப்பார். அந்த யோகமும் செல்வ வளமும் இப்போதும் தொடரும். அதே சமயம் அலைச்சல் அதிகமாகும்.

எவ்வளவு பிஸியாக இருந்தாலும் கீழே தரப்பட்டிருக்கும் உங்களுடைய ஜென்ம நட்சத்திர பைரவ மந்திரத்தை தினமும் 108 முறை எழுதி வாருங்கள் அல்லது ஒரு மணி நேரம் ஜெபித்து வாருங்கள்.

இந்த மூன்று ஆண்டுகள் இதை வைராக்கியமாக விடாப்படியாக பின்பற்றி வருவதன் மூலமாக இந்த மூன்று வருடங்களும் அடுத்து வரக்கூடிய மூன்று வருடங்களும் உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை இருக்கும் என்பது உறுதி.

அது தவிர உங்களுடைய ராசிக்கு இரண்டாம் இடத்தில் ராகு பகவான் இந்த வருடம் முழுவதும் இருப்பார். எனவே நீங்கள் சாதாரணமாக பேசினாலே அதில் குற்றம் கண்டுபிடித்து உங்களை அவமானப்படுத்தக்கூடிய சம்பவங்கள் அடிக்கடி நடைபெறும்.

இதை தடுப்பதற்கு உங்கள் ஊரில் உள்ள உக்கிரமான பெண் தெய்வம் கோயிலுக்கு (செல்லியம்மன், பொன்னியம்மன், அங்காள பரமேஸ்வரி, பத்திரகாளி, ருத்ர காளி, மஹா காளி, வராஹி, ரேணுகாம்பாள், காளிகாம்பாள், கெங்கம்மாள்) தினமும் ஒரு முறை சென்று வாருங்கள். 15 நிமிடங்கள் வரை பிரார்த்தனை செய்யவும்.

அது இயலாத பட்சத்தில் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அல்லது ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பாம்பு புற்றுள்ள கோயிலுக்கு சென்று சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்து வாருங்கள் முடிந்தால் அந்த பாம்பு புற்றில் நாட்டு பால் மற்றும் முட்டை வைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இதன் மூலமாக இரண்டாம் இட ராகு உங்களுக்கு தர வேண்டிய திடீர் அவமானங்களை குறைத்து விடுவார்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ’ஓம் ஹ்ரீம் பம் அஸிதாங்க பைரவாய நமக’ என்ற மந்திரத்தையும்,

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ‘ஓம் ஹ்ரீம் பம் குரோதன பைரவாய நமக’ என்ற மந்திரத்தையும்,

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ’ஓம் ஹ்ரீம் பம் உன்மத்த பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தையும் தினமும் ஒரு மணி நேரம் ஜெபித்து வர வேண்டும் அல்லது 108 முறை எழுதி வர வேண்டும் அல்லது தினமும் துக்க நிவாரண அஷ்டகம் என்ற பாடல் பாடலை ஜெபித்து வரவும் அல்லது தினமும் அபிராமி அந்தாதி உடன் சேர்த்து வராகி மாலை ஐந்து முறை ஜெபித்து வரவும்.

நிம்மதியான வாழ்க்கை தான் விலைமதிப்பில்லாத சொத்து என்று நம்புபவர்கள் இங்கே கூறப்பட்டிருக்கும் சித்தர்களின் உபதேசங்களில் ஏதாவது ஒன்றை மட்டும் விடாப்பிடியாக அடுத்த எட்டு ஆண்டுகள் பின்பற்றி வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

’தீதும் நன்றும் பிறர் தர வாரா’

சிவராஜ யோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
+919629439499
ராஜபாளையம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.