
தமிழகம்
டாக்டராக முடியாததால் விரக்தி! முன்னாள் மருத்துவ மாணவர் தற்கொலை;;
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி தூக்க மாத்திரை சாப்பிட்டு மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவருக்கு 26 வயதில் குமரவேல் என்ற மகன் உள்ள நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மருத்துவ படிப்பிற்காக சேர்ந்துள்ளார்.
அப்போது 2 பாடங்களில் குமரவேல் தேர்ச்சி பெறாததால் மனவேதனையில் இருந்துள்ளதாகவும், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மனநல சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கல்லூரியில் சேரும் போது கொடுத்த பள்ளி சான்றிதழ்கள் திரும்ப பெறுவதற்காக தனது தந்தையுடன் குமரவேல் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது தனது நண்பர்களை பார்த்துவிட்டு கழிவறைக்கு சென்ற குமரவேல் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை உள்ளே சென்று பார்த்தப்போது மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனால் அங்கு சிகிச்சைக்காக அனுமதித்தப்போது சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
