மருது சகோதரர்களில் பெரிய மருதுவின் நோய் தீர்த்த குன்றக்குடி முருகன் ஆலயம்- ஆலயம் அறிவோம்

சஷ்டி தினமான இன்று திருமண வாழ்வை சிறப்பானதாக செய்யும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியிலிருந்து சுமார்  10 கி.மீ தொலைவில் உள்ள குன்றக்குடி திருத்தலத்தை ஆலயம் அறிவோம் பகுதியில் தரிசிக்கலாம். குன்றக்குடி, குன்னக்குடி, சிகண்டிமலை, மயூரகிரி என பல்வேறாய் அழைக்கப்படுகிறது. குமரனின் அருள் பரிபூரணமாய் நிறைந்திருக்கும் இத்திருத்தலம், பிரார்த்தனை தலங்களில் முதன்மையானது. முருகன், வள்ளி, தெய்வானை இம்மூவரும் தனித்தனி மயில்களில் வீற்றிருக்கும் கோலமும், இந்த மலையே,மயில் உருவம் மாதிரி காட்சியளிப்பதுதான் இக்கோவிலின் சிறப்பே!

d6cc9fe64de8ccf26634cbd2b061bdda

தலவரலாறு:

ஒருமுறை பிரம்மனை சுமக்கும் அன்னம், திருமாலை சுமக்கும் கருடன் முருகப்பெருமானை சுமக்கும் மயில் மூவருக்கும் வேகமாக பறக்கக்கூடியவர் தானே என்று வாக்குவாதம் ஏற்பட்டது. விவாதத்தில் கடுங்கோபம்கொண்ட விஸ்வரூபமெடுத்த மயில் அன்னத்தினையும், கருடனையும் விழுங்கிவிட்டது. இதனால் பிரம்மனும், திருமாலும் முருகனிடம் வந்து முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற முருகப்பெருமானும், மயிலிடம் இருந்து அன்னத்தையும், கருடனையும் மீட்டுக் கொடுத்தார். மேலும் மயிலின் கர்வத்தினை அடக்க மயிலை, மலையாக மாறிப்போகும்படி சாபமிட்டார்.

தன் தவறுக்கு வருந்திய மயிலும் குன்றக்குடி வந்து மலையாக மாறி முருகப்பெருமானைக் குறித்து தவம் இருந்தது. மயிலின் தூய்மையான  தவத்தில் மகிழ்ந்த முருகப்பெருமானும் , மயிலுக்கு சாபவிமோசனம் அளித்தார். மயில் உருவத்தில் இருந்த அந்த மலை மீதே எழுந்தருளி அருள்புரிந்தார் என்கிறது இத்திருக்கோயிலின் தல வரலாறு.

விசேசங்கள்:

விரதமிருந்து காவடி எடுத்து முருகனை வழிபாடுவது இத்தலத்தின் சிறப்பாகும். இது தவிர தங்களது பிரார்த்தனை நிறைவேறியப்பின் நேர்த்திக்கடனாய் பால் குடம் எடுத்தல், அங்கபிரதட்சணம் செய்வது, அடிப்பிரதட்சணம் செய்கின்றனர்.

மூல நோய் எனப்படும் பிளவு நோயால் மருது பாண்டிய சகோதரர்களில் மூத்தவருக்கு கஷ்டப்பட்டபோது எத்தனை வைத்தியம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. ஒரு முருக பக்தர் சொல்லியபடி, உப்பு விற்கும் காடன் செட்டியார் இத்தலத்து முருகனை வேண்டி, முருகனின் அருட்பிரசாதத்தை கொண்டு போய் தேய்த்து பிணி நீங்கி நிம்மதியுற்றார். அன்றிலிருந்து இக்கோவில் வந்து வேண்டுதல் வைத்தால் தீராத தோல் வியாதிகள் கூட தீரும் என்பது நம்பிக்கை. இது புராணக் கதையல்ல.. சில நூற்றாண்டுகளுக்குமுன் நிகழ்ந்த உண்மை . ‘வீரமருது பிளவை நோய் தீர்த்த விரல் மருந்தே! ஆறுமுக அப்பா குன்றக்குடி யோங்கும் அற்புதமே’ என்ற குன்றக்குடி பாமாலையில் வரும் வரிகள் இந்நிகழ்விற்கு சான்று.

நோய் தீர்ந்ததற்கு நேர்த்திக்கடனாய் திருவீதிக்குத் தென்திசையில் உள்ள தீர்த்தக் குளத்தை செப்பனிட்டு, படித்துறைகள் கட்டி, சுற்றிலும் தென்னை மரங்களை நட்டு வைத்தார். அதற்கு ‘மருதாவூரணி’ என்று பெயர் சூட்டப்பட்டது. மூலவரின் பீடத்தின்கீழ் மாறியிருந்த எந்திரத் தகட்டை செப்பனிட்டு சாத்தினார். மூலவர் சன்னிதியில் மயில் மண்டபம், உற்சவர் சன்னிதியில் அலங்கார மண்டபம் மற்றும் சுற்றுச் சுவர்களை கட்டினார். அங்குள்ள ராஜ கோபுரமும் பெரிய மருதுவால் கட்டப்பட்டதே ஆகும். அடிப்பகுதியில் மருது பாண்டியன் உபயம் என்று பொறித்து, ஒரு தங்க கவசம் செய்து உற்சவ மூர்த்திக்கு சாத்தினார். தேர் செய்து, தைப்பூச விழாவினைப் பெரியளவில் நடத்தினார். காடன் செட்டியார் பெயரில் மண்டகப்படி ஏற்படுத்தி, அன்னதானச் சத்திரமும் கட்டினார் என்பதற்கு இக்கோவிலில் மருது சகோதரர்களின் சிலைகள் யானை கட்டி மண்டப வாயில் வைக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம் – மதுரை மீனாட்சியம்மன்கோவில் உயர் கோபுரத்திற்கு இணையான முகப்புக் கோபுரத்தைக் கட்டினார்கள்.

31987e9ce7888aa40364300dca6b2733

உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டோர் இத்தலத்து முருகனை வேண்டி, நோய் குணமானதும்வேண்டுதல் நிறைவேறியப் பின் உடல் உறுப்புகள் பொறிக்கப்பட்ட வெள்ளி தகட்டை உண்டியலில் சேர்ப்பிக்கின்றனர். மலையின் கீழ் பகுதியில் சுயம்புவாக தோன்றிய தேனாற்றுநாதர் கோவில் உள்ளது. இந்த சுயம்பு மூர்த்தியை அகத்திய முனிவர் வணங்கி வழிபாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தல அம்பாள் அருட்சக்தி என்ற திருநாமத்துடன் அழகே வடிவாக எழுந்தருளியிருக்கிறார். வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான் மயில் வாகனத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பதால், இங்கு திருமணம் செய்துக் கொள்ளும் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்வார்கள்  என்பது நம்பிக்கை.  

b67483fd5b60dc7debc2064d10ef5a9e

மலையின் நுழைவு வாசல், மயிலின் தோகைபோல் தோன்றுவதால், அங்கு வீற்றிருக்கும் பிள்ளையாருக்கு ‘தோகையடி விநாயகர்’ என்று பெயர். அவரை வழிபட்டுவிட்டு மலை ஏறத் தொடங்கினால், முருகனுக்கு காவடி எடுத்த இடும்பன் சன்னிதி உள்ளது. சற்று தள்ளி இடப்புறம் தேவியோடு தோன்றும் வல்லப கணபதி காட்சித்தருகிறார். மலைமீது முருகனின் படைத்தளபதி வீரபாகு நம்மை வரவேற்கிறார். மலைக்கோயிலில் தெற்குநோக்கிய ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது. மலைமீது கோவிலில் ஒளி பிரகாரம்தான் உள்ளது. அதில் நால்வர், தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், சொர்ணகணபதி, பைரவர், நடராஜர் ஆகியோர் சன்னிதிகளும், சோமாஸ்கந்தர், விசாலாட்சி சன்னிதிகளும் வடகிழக்கில் நவக்கிரக சன்னிதியும் விளங்குகிறது. கருவறையில் கிழக்கு நோக்கியபடி மூலவர் ‘சண்முகநாதர்’ ஆறு முகங்களும், பன்னிரு கரங்களுமாக, சுகாசன நிலையில், வலது காலை மடித்து வைத்தும், இடது காலை தொங்கவிட்டும், நிற்கும் மயில் மீதிருந்து இறங்கி வருவதுப்போல காட்சியளிக்கிறார். அவருடனே அமராமல் தனித்தனி மயில்கள்மீது காட்சி தருவது கண்கொள்ளா காட்சியாகும்.

அருணகிரிநாதரின் பாடல் பெற்ற இந்த திருதலத்தில்,10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர பெருவிழாவும், 10 நாட்கள் கோலாகலமாக  நடைபெறும் தைப்பூசத் திருநாளும் சிறப்பு வாய்ந்தது. இது தவிர முருகப் பெருமானுக்கே உரிய சித்திரை பால் பெருக்கு விழா, வைகாசி விசாகம், ஆனி மகாபிஷேகம், ஆடி திருப்படி பூஜை, ஐப்பசியில் கந்தசஷ்டி போன்றவையும்  சிறப்பாக நடைபெறும். இங்கு, பலர் குடும்பத்தில் குன்றக்குடி முருகனே குலதெய்வமாகும்.

கோவில் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.  காரைக்குடியிருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் காரைக்குடியிலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் இருக்கிறது, குன்றக்குடி. திருமயம் – திருப்பத்தூர் சாலையில் வழியாகவும் செல்லலாம்.பிள்ளையார்பட்டியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில்தான் குன்றக்குடி குமரன் இருக்கிறார்.

திருமண வரம் வேண்டுவோர், தம்பதியருக்குள் பிணக்குகள் நீங்க, நாட்பட்ட நோய் தீர குன்றக்குடி சன்முகநாதரை வணங்கி நற்பலன் பெறுவோம்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews