தாய் தந்தையரை வணங்கியதால் கிடைத்த பெரும் பேறு…கடவுளே பக்தனை தேடி வந்த அதிசயம்…!

இன்று தொடங்கியுள்ள அற்புதமான மார்கழி மாதத்தில் (16.12.2022) அழகான காலைப்பொழுதில் இறைவனைப் பற்றி நினைப்பதும், வழிபடுவதும், அந்த சிந்தனையிலேயே ஊறி இருப்பதும் கிடைத்ததற்கரிய பேறு.

எம்பெருமானின் திருவடி நிழலை நாம் எல்லோரும் அடையவேண்டும் என்பதற்காக இறைவனே ஒரு ரூபமாக வந்து அருள்புரிந்தார் என்று சொன்னால் அது மாணிக்கவாசகர் தான். இறைவனை ஈர்த்து ஆட்கொண்டு அருளிய பிரான். இந்த உலக மக்கள், உய்வு பெற வேண்டும் என்பதற்காக ஒருவாசகம் உதிர்த்தாலும் அது திருவாசகமாக வேண்டும் என்று அருளிச் சென்ற அற்புதமான நாயகர் மாணிக்கவாசகர்.

அவர் எம்பெருமானை முதன்முறையாக பாட ஆரம்பிக்கிறார். அது தான் திருவெம்பாவையின் முதல் பாடல்.

Thiruvembavai 1
Thiruvembavai 1

இந்தப்பாடலில் இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாத அருள்பெரும் ஜோதியாக விளங்கக்கூடிய நாயகர். அவருக்குத் தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை. அதாவது இறப்பும் பிறப்பும் இல்லாதவர். இறைவனின் திருவடியை நாம் சிக்கென பிடித்துக் கொண்டால் நாம் நிச்சயமாக உய்வு பெறலாம். இந்த இன்பத்தை அடைய எல்லோரையும் வாருங்கள் என்று அழைக்கிறார் மாணிக்கவாசகர்.

இப்படி ஒரு வழிபாட்டுக்கு உரிய அற்புதமான மாதம் மார்கழி. அதை மறந்து இப்படி வீட்டில் படுத்து உறங்குகிறீர்களே என ஆத்மாக்களை எழுப்புகிறார். நம் எல்லோரையும் தூக்கத்திலிருந்து எழுப்பும் பாடல் அல்ல இது. அஞ்ஞானம் என்ற ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறோம். அதிலிருந்து எழுப்பவே இதுபோன்ற ஞானபோதனை தரும் பாடலை மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.

Thiruppavai 1
Thiruppavai 1

இந்த முதல் நாள் பாசுர பாடலில் ஆண்டாள் நாச்சியார் மார்கழி மாதம் துவங்குகிறபோதே இது நல்ல மாதம் என்கிறார். கண்ணனே மார்கழி மாதமாய் நான் இருக்கிறேன் என்று சொன்னதால் பெருமை மிகுந்த இந்த மாதத்தில் பெண்களே நீராட வாருங்கள். எதில் என்றால் கண்ணன் என்ற பேரமுத வெள்ளத்தில் நீராட வாருங்கள்.

markali
Markali

கண்ணனுடன் இரண்டற கலந்து பக்தி செய்து வாருங்கள் என்றார் ஆண்டாள் நாச்சியார். தாய் தந்தையர்களை மதித்து வாழ வேண்டும் என்பதையே இந்தப் பாடல் வலியுறுத்துகிறது.

ஜானுதேவர், சத்யவதி என்ற தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் புண்டரீகன். இவருடைய மனைவி இவருக்கு நேர்மாறானவர். இவர் வந்தபிறகு தாய், தந்தையரை எதிர்த்துப் பேசுவது, ஒரு கட்டத்தில் அவர்கள் தேவையில்லை என நிராகரிக்கிறார். ஒரு நாள் காசி யாத்திரையில் தனது பெற்றோரை அனுப்பி விடச் சொல்கிறார் இவரது மனைவி. அப்போது ஊரார் அத்தையும், மாமாவையும் காசி யாத்திரைக்கு அனுப்பி உள்ளாரே. பெரும் புண்ணியம் அல்லவா கிட்டும் என இவர்களைப் புகழ்ந்து சொல்கின்றனர்.

அதற்கு இவர்களுக்கு மட்டுமா புண்ணியம் கிடைக்க வேண்டும். நமக்கும் கிடைக்கட்டுமே என்று காசி யாத்திரைக்கு குதிரையில் செல்கின்றனர். ஆனால் அத்தையும், மாமாவும் நடந்து செல்கின்றனர். அப்படி செல்லும் வழியில் ஒரு குக்குட முனிவரின் ஆசிரமத்தில் தங்குகின்றனர்.

அப்போது அங்கு சில பெண்கள் அழுக்கான உடையில் செல்கின்றனர். சிறிது நேரம் கழித்து தேவதை போன்று ஆடைகள் உடுத்தி வெளியே வருகின்றனர். தினமும் இப்படி நடக்கிறது. இதைப் பார்த்த புண்டரீகன் ஒரு நாள் இவர்களை நிறுத்தி நீங்கள் யார்? எதற்காக இப்படி அழுக்கு உடைகளில் வந்து வெளியே செல்கையில் தேவதை போல வருகிறீர்கள் என கேட்கிறான்.

நாங்கள் புண்ணிய நதிகள். எங்கள் மேல் எல்லோரும் பாவத்தைக் களைந்து விட்டு செல்கின்றனர். அதற்கு நாங்கள் எங்கள் பாவத்தைக் கழுவ என்ன செய்வது என்று இறைவனிடம் கேட்கையில் தாய் தந்தையரை மதிக்கும் இந்த முனிவரிடம் சென்று அவருடைய இடத்தை சுத்தப்படுத்துங்கள். உங்கள் பாவம் தொலையும் என்றார்.

அது போல தான் நாங்கள் செய்து வருகிறோம் என்றனர். இதைக் கேட்டதும் நடுங்கிப் போனான் புண்டரீகன். நாம் கங்கை புனிதம், எல்லா நதிகளும் புனிதம் என்கிறோம். ஆனால் அந்த புண்ணிய நதிகளும் கூட தன்னை மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்த இந்த வேலைகளை எல்லாம் செய்து வருகிறதே என உணர்கிறான்.

பின்னர் தன் மனைவியிடம் இது பற்றி கூறி நாம் செய்வது தவறு. தாய், தந்தையரை வணங்க வேண்டும் என்று சொல்லி, தினமும் அவர்களுக்குப் பூஜை செய்கிறார். இவரது பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக கிருஷ்ணர் இவரது வீட்டுக்கு வருகிறார். வெளியே கொஞ்சம் வாப்பா என்றழைக்கிறார். தாய் தந்தையருக்கு பூஜை செய்து கொண்டு இருக்கிறேன். எப்படி வருவது என்றார் புண்டரீகன்.

நான் வரும் வரை வெளியே நில் என்றார். தண்ணியும், சேறுமாக இருக்கிறது. எப்படி நிக்கிறது என்று கேட்டார் கிருஷ்ணர். உடனே ஒரு கல்லைத் தூக்கிப் போட்டு இதில் நில் என்றார். வெளியில் வந்த பிறகு தான் அவர் இறைவன் என்பதை உணர்ந்தார் புண்டரீகன்.

இறைவன் அவருக்கு வரம் தருகிறேன் என்று சொன்னார். அப்போது புண்டரீகன், என்னைத் தேடி எப்படி இங்கு வந்தாயோ, அது போல் இந்த இடத்தில் இருந்து உன்னைத் தேடி வருபவர்களுக்கு வேண்டும் வரத்தைக் கொடு என்றார்.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.