தனக்கே இல்லாத நிலையிலும் அடியாரின் பசியாற்றிய நாயனார்..! பூமியைத் தேடிக் கொண்டு வந்த வராகர்

இறைவனின் கருணை உள்ளம் அளப்பரியது. நாம் ஏதாவது சில தவறுகள் தெரியாமல் செய்து விட்டால் கூட அதைப் பொருட்படுத்தாது மன்னித்து அருள்பவர். இதை மையமாகக் கொண்டு இன்றைய மார்கழி 28 (12.01.2023) திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவைப் பாடல்களைப் பார்ப்போம்.

மாணிக்கவாசகர் அருளிய 8வது நாள் திருப்பள்ளியெழுச்சியில் முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் என்று பாடல் தொடங்குகிறது.

Markali 28
Markali 28

இந்தப்பாடலில் இறைவனின் பெருமைகளைப் பற்றி சொல்லிக்கொண்டே போகிறார். நாயன்மார்களின் வரலாறைப் பார்க்கும்போது வசதியானவர்களை சென்று இறைவன் பார்த்ததை விட வசதியற்ற பழங்குடில்களில் உள்ளவர்களைத் தான் அதிகம் பார்த்து இருக்கிறார் என்பது தெரியும்.

ஒரு இடத்திற்குப் போனா நமக்கு நல்ல பொருள் கிடைக்கும்னா அந்த இடத்தைத் தானே உலகம் நாடிச்செல்லும். அந்த இடத்தில் இருப்பவர்களைத் தான் இறைவன் செல்வாரே தவிர அங்குள்ள பொருள்களை நாடி அல்ல. இளையான்குடி மாற நாயனார் நல்ல வசதியாக வாழ்ந்தவர் திடீரென வறுமையின் காரணமாக ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படும் சூழலுக்கு ஆளானார்.

தன்னுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாக இருக்க தன்னை நாடி வரும் அடியார்களுக்கு அவர் எந்தக் குறையும் வைத்ததில்லை. தன்னால் முடிந்த அளவு ஏதாவது ஒரு உபசாரம் செய்து விடுவார். அவர் ஒரு பழங்குடிலில் இருக்கிறார்.

இரவு நேரம்…என்ன சாப்பிடுறது? கணவனுக்கு என்ன கொடுக்குறதுன்னு அந்த அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியல. அவர் ஏதும் கேட்டுருவாரோன்னு பயந்து படுக்கப் போயிறலாமான்னு கேட்டார். அவரும் வீட்டில் இருந்தால் தான் மனைவி ஏதாவது தருவாரே…ன்னு அவரும் தண்ணீரைக் குடிச்சிட்டுப் படுக்கப் போய்விட்டார்.

இரவு இருவரும் தூங்கச் செல்லும் வேளையில் கதவை யாரோ தட்டுகிறார்கள். கதவைத் திறந்தால் அங்கு ஒரு அடியார். நல்ல மழை பெய்யுது. அவர் ஒரு பழுத்த சிவனடியார். அவரை உள்ளன்போடு வரவேற்று தலைக்குத் துவட்ட துண்டு கொடுத்து உட்கார வைத்தார். அப்போது இந்த வழியாக வந்தேன். இங்கு உன் குடில் தெரிஞ்சது. பசியாறலாம்னு வந்துருக்கேன்.

ஏதாவது சாப்பாடு கொடுன்னார். இருவரும் உள்ளே போய் பேசினர். என்ன செய்வது? யாரிடமும் இந்த நேரத்தில் கடனும் வாங்க முடியாது. வீட்டிலும் ஒன்றுமில்லை. எப்படி உணவு தயாரிப்பது? என்று கேட்டார் மனைவி. உடனே ஒரே ஒரு வழி இருக்கு. என்ன சொல்லு என்றார் நாயனார்.

மத்தியானம் இருந்த கொஞ்ச நெல்லை விதைச்சிட்டு வந்தேன். அது இந்த மழையில மேல வந்துருக்கும். ஒரு கூடை தாரேன். அதுல எடுத்துட்டு வாங்க. அதை வச்சி ஏதாவது செய்யலாம். அவரும் கூடையை எடுத்துட்டுப் போயி விதைநெல்லை எடுத்துட்டு வந்துட்டாரு. எல்லாம் சரி.

இப்போ இதை எரிக்க விறகு வேணுமே என்ன செய்றதுன்னு கேட்டார். வீட்டின் கூரையில் இருந்த சில குச்சிகளை விறகாக்கினார். தோட்டத்தில் முளைத்து இருந்த கீரையை ஆய்து உணவுடன் சமைத்தார். அந்த அமுதை இருவரும் இணைந்து பரிமாறினர்.

அமுது உண்ட இறைவன் அவர்கள் இருவரையும் ஆட்கொண்டார். நாம் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் அடியார்களுக்கும் கொடுக்கணும். என்னைக்காவது ஒருநாள் இந்த ரூபத்தில இறைவன் வருவார் என்பதைத் தான் இந்தப்பாடலில் மாணிக்கவாசகர் பதிவு செய்துள்ளார்.

ஏழைகளின் குடிலுக்கு நீ சென்று அருள்கிறாயே இறைவா…அந்தத் திறனை நான் எப்படி சொல்வது? இறைவா நீயே எனக்குக் குரு. எனை ஆட்கொண்ட பரம்பொருளே நீ பள்ளி எழுந்தருளாயே என்று இந்தப் பாடலில் குறிப்பிடுகிறார்.

இறைவனை வழி பட வேண்டுமானால் செல்வம் தேவையில்லை. எந்த நிலையில் இருந்தாலும் உண்மையான பக்தி இருந்தால் போதும்.

இன்றைய திருப்பாவைப்பாடல் கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் என்று தொடங்குகிறது.

Thiruppavai 28
Thiruppavai 28

இந்தப்பாடலில் எம்பெருமானிடத்தில் தனது வேண்டுகோளை எல்லாம் சொல்லிக் கொண்டே வருகிறார். கண்ணா…நாங்கள் ஏதாவது தவறு செய்து இருந்தால் கோவிக்க வேண்டாம்.

எங்களை மன்னிச்சிடு. கொஞ்சம் பொறுத்து அருள்க. உன்னை ஏதாவது கேலியா சொல்லியிருந்தா…சில பேர் சொல்லி அழைச்சிருந்தா…அது தவறாக இருந்தால் மன்னிச்சிக்கோ. கோவிந்தனுடைய நாமத்தின் சிறப்பை இங்கு உணர்த்துகிறார். கோவர்த்தனகிரியைக் குடையாக மாற்றி உயிர்களைக் காப்பாற்றியவர் கோவிந்தன்.

பூமியானது ஒரு காலத்தில் மறைத்து வைக்கப்பட்ட போது அந்த பூமியைத் தேடிக் கொண்டு போய் எடுத்து வந்ததனால் கோ விந்தன் ஆனார். வராக அவதாரத்தில் தன் மூக்கின் நுனியில் தாங்கிக் கொண்டு வந்ததைப் பார்க்கலாம். பசுக்கூட்டத்திற்கு எல்லாம் தலைவனாக இருந்ததால் கோவிந்தனானார். பதி, பசு, பாசம் என்று சொல்வர்.

பதியாகிய இறைவனை அடைவதற்காகத் தான் பசுக்களாகிய ஆத்மாக்கள் எல்லோரும் காத்துக்கொண்டு இருக்கிறோம். அதனால் ஆத்மாக்களாகிய பசுக்கூட்டத்தை மேய்க்கும் தலைவன் தான் இறைவன்.

மறுபடியும் வினையாகிய துன்பம் திரும்பி நம்மை வந்து அடையாது என்பதற்காகத் தான் கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் போடுவர். உயிர் பிரிந்ததும் இந்த பூத உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்கையில் சொல்லும் நாமம் கோவிந்தா கோவிந்தா என்று தான் சொல்வர். அப்போது தான் இது திரும்பாது. சின்ன தவறு செய்து இருந்தா கூட எங்களை மன்னிச்சி ஆட்கொள்ளணும் என்று ஆண்டாள் எம்பெருமானிடம் கோரிக்கை வைக்கிறார்.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.