எப்போதும் துன்பத்தில் இருந்து விடுபட என்ன செய்வது? பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டது ஏன்?

இறைவனின் அடியார்களோடு எப்பவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் வாழ்க்கையில் எனக்கு எவ்வித துன்பமும் இல்லை என்றே அடியார்கள் எப்போதும் நினைப்பதுண்டு. அதை நினைவுபடுத்தும் வகையில் மார்கழி 19வது நாளான இன்று (3.1.2023) மாணிக்கவாசகர் மற்றும் ஆண்டாள் அருளிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போம்.

மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாடலைப் பற்றிப் பார்ப்போம். உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று ஆரம்பிக்கிறது இன்றைய பாடல்.

Markali 19
Markali 19

இதில் உன்னுடைய கையில் என்னுடைய பிள்ளை அடைக்கலம் என்று எப்படி ஒரு தந்தை கொடுப்பாரோ அதே போல பெருமானே என்னை உனக்கு நான் அடையாளமாகத் தந்து விட்டேன். உன்னுடைய அடியாரைத் தவிர யாரிடமும் சேர மாட்டேன். உன்னுடைய அடியாரைத் தவிர யாருடனும் நான் சேர மாட்டேன்.

உன்னுடைய அடியாருடைய கூட்டத்திலேயே தான் நான் இருக்க வேண்டும் என்றும் இதைத் தாண்டி வேறு எங்கும் நான் போக மாட்டேன். இப்படி ஒரு பரிசை எனக்குக் கொடுத்தால் அதுவே போதும். இப்படி ஒரு பாக்கியத்தைக் கொடுத்தால் எனக்குக் கவலையே இல்லை. சூரியன் எந்தத் திசையில் உதித்தால் எனக்கு என்ன இந்தப் பரிசே போதும் என பணிந்து இறைவனை வேண்டுகிறார்.

மூர்த்தி நாயனார் மதுரையில் வாழ்ந்த அடியார். இறைவன் மீது அதீத நாட்டம் கொண்டவர். சொக்கேசப் பெருமாளுக்கு தினமும் கைங்கர்யம் செய்து வந்தார். அவர் சந்தனத்தை அரைத்து இறைவனுக்குக் கொடுத்தார்.

நாளாக நாளாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனால் கடைசியில் சுவாமிக்கு அரைக்க சந்தனக்கட்டையே இல்லாமல் போய்விட்டது. சந்தனக்கட்டைக்குத் தான் முட்டுப் போட முடியுமே தவிர, என் கைகளுக்கு முட்டுப் போட முடியாது. இந்தக் கையையே சந்தனக்கட்டையாக நினைத்து நான் உனக்கு இழைத்துத் தருகிறேன் என்றார். அப்படி சொன்னவர் கருங்கல்லில் முழங்கையை வைத்துத் தேய்க்க ஆரம்பித்தார்.

Moorthi Nayanar
Moorthi Nayanar

தோல், சதை, எலும்பு, மஜ்ஜை என ஒவ்வொன்றாகத் தேய்கிறது. ரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்போது இறைவன் எழுந்தருளி உன் பக்தியின் வைராக்கியத்தை உலகுக்குக் காட்டவே இப்படி ஒரு சோதனை செய்தேன். நீ மிக உயர்ந்த அடியார்களின் வரிசையில் இருப்பாய் என்றார். இதற்கு அப்புறம் ஒரு மாற்றம் நிகழ்கிறது. நாட்டில் அரசியல் மாற்றம் நிகழ்கிறது. பட்டத்து யானையின் துதிக்கையில் மாலையைக் கொடுத்து அது யாருக்கு சூட்டுகிறதோ அவர் தான் ராஜா.

அப்படி அந்த மாலை இந்த மூர்த்தி நாயனார் கழுத்தில் விழுகிறது. இவர் அரசராக வேண்டும். மக்கள் எல்லோரும் இப்படி ஒரு அடியார் அரசராக வந்தால் நாட்டு மக்களுக்கு ரொம்ப நல்லது என்கிறார்கள். எல்லோரும் அவரை மன்னராக வாங்க. சடைமுடியை எடுத்து விட்டு இந்த மணி முடியை அணிந்து கொள்ளுங்கள்.

ஆடை ஆபரணங்களை அணிந்து கொள்ளுங்கள். நான் மன்னராக வேண்டுமானால் ஒரு நிபந்தனை. நான் சடை முடியுடன் தான் இருப்பேன். என்றைக்கும் உடுத்தும் காவி உடை தான் உடுத்துவேன். அடியார் கோலத்தில் தான் இருப்பேன். ஆபரணங்களை அணிய மாட்டேன். அதைத் தான் இறைவன் விரும்புகிறார். இதற்கு சம்மதித்தால் நான் மன்னராக இருக்கிறேன் என்றார்.

ஆண்டாள் இன்றைய பாடலில் குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல் என்று தொடங்குகிறார்.

Aandal 19
Aandal 19

சுவாமி மெத்தென்று இருக்கிற பஞ்சு சயனத்தில் துயில் கொள்கிறார். மனிதனுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் நாம் செய்கிறோமோ அதுக்குண்டான தர்மநெறிகளை வகைப்படுத்தவே இறைவன் அவ்வாறெல்லாம் நமக்கு எழுந்தருள்கிறார்.

பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளார். இது ஏன் என்றால் கடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். அதே போல நாமும் குளிர்ச்சியான இடங்களில் படுக்க வேண்டும். படுக்கிற படுக்கை மெத்தென்று இருக்க வேண்டும்.

அதனால் சுவாமி பள்ளி கொண்டு இருக்கிற ஆதி சேஷன் நாகம் மெத்தென்று இருக்கும். அதன் மேல் படுத்து இருக்கிறார். பாம்பு என்றாலே படையும் நடுங்கும். அப்படி என்றால் சுவாமி எவ்வளவு தைரியசாலி என்று பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்தது பள்ளி கொண்டு இருக்கும் சூழல் இருட்டாக இருக்க வேண்டும்.

அப்போது தான் நல்ல உறக்கம் வரும். அதே நேரம் கொஞ்சம் வெளிச்சத்தில் தூங்கலாம். அதே போல் சுவாமியின் தலைக்குப் பின்னால் இருந்து ஆதிசேஷனின் கண்கள் நீல நிறத்தில் பளிச்சென்று மின்னி லேசான ஒளியைக் கொடுக்கிறது.
இதுமட்டுமல்லாமல் மகாலெட்சுமி தாயார் பாத சேவை பண்ணுகிறார்.

ஆனால் பெருமாள் தூங்கவில்லை. யோகநித்திரை செய்து கொண்டு இருக்கிறார். காவிரி, கொள்ளிடம் என்ற இரு ஆறுகளுக்கு நடுவே ஸ்ரீரங்கம் சுவாமி பள்ளி கொண்டு இருக்கிறார். இதில் ஆறுகள் என்பது வடகலை, இடகலை என்ற இரு நாடிகள். அவற்றிற்கு இடையே சுழுமுனையை நோக்கி யோக நித்திரையில் இருக்கிறார் சுவாமி.

இது ஞானத்துயில். ஆத்மாக்களாகிய ஒவ்வொருவரையும் இறைவன் ரட்சித்து அருள வேண்டுமே என்ற மோனநிலையில் இறைவன் பள்ளி கொண்டு இருக்கிறார்.

இப்படியே அழகான கட்டில் மேல் மெத்தென்று இருக்கிற மெத்தையின் மேல் நப்பிண்ணையோடு சேர்ந்து தூங்கி விடலாம் என்று நினைக்கிறாயா…எழுந்து வா…எங்களை வந்து பாரு..நாங்களும் அவரோட கருணையைப் பெற வேண்டும் என்று நப்பிண்ணையோடு ஆண்டாள் பேசுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

 

 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews