#Alert இன்று முதல் அனுமதியில்லை; மெரினாவில் தலைவர் நினைவிடங்களை பார்வையிட தடை!

சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள தலைவர்கள் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு இன்று முதல் நாளை பிற்பகல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் வரும் 26-ம் தேதி 74 வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் குடியரசு தின விழாவானது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.இந்தாண்டு மெட்ரோ பணிகள் காரணமாக இடம் மாற்றம் செய்யப்பட்டு உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறுகிறது. இதுவரை இரண்டு கட்டங்களாக ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குடியாசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி சென்னை, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கமாகும். தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு தமிழ்நாடு ஆளுநர் மற்றும்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறவுள்ளது.

எனவே, பாதுகாப்பு காரணங்களால் 25.01.2023 முதல் 26.01.2023 முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பிற்கு ஒத்துழைப்பு அளிக்கும் படி அரசு சார்பில் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு குடியரசு தின விழாவில், பெண்கள் சிறப்பு காவல் படையின் கூட்டுக்குழு முரசு இசை நிகழ்ச்சியானது சேர்க்கப்பட்டுள்ளது. பின்பு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளும், பதக்கங்களும்,காசோலையும் வழங்குவது போல் ஒத்திகையானது நடைப்பெற்றது. அதைத்தொடர்ந்து பள்ளி,கல்லூரி மாணவிகளின் மயிலாட்டம் காவடியாட்டம் பொய்க்கால் ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் 6 குழுக்களாக நடைப்பெற்றது.
மேலும் தமிழ்நாடு ,குஜராத், மகாராஷ்டிரா ,ராஜஸ்தான், உள்ளிட்ட நான்கு மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகள் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.