மார்கழியில் கன்னிப்பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பாவை நோன்பு

ஆன்மிக மாதமான மார்கழி பிறந்து விட்டது. மார்கழியில் அதிகாலை எழுந்து அழகான வண்ணக்கோலம் இட்டு அதில் ஒரு பூசணிப்பூவையும் வைப்பதுதான் மரபு.

இப்படி எங்கு பார்த்தாலும் மார்கழியில் ஆன்மிகம் தான் மேலோங்கி நிற்கும்.

இந்த மாதத்தில் கன்னிப்பெண்கள் பாவை நோன்பு இருந்து வழிபட்டால் அவர்களுக்கு வேண்டியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கண்ணனை கணவனாக மனதில் ஏற்ற ஆண்டாள் தன்னை ஆயர்பாடி பெண்களில் ஒருத்தியாக மனதில் நினைத்துக்கொள்கிறாள்.

திருவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், வடபெருங்கோயில் நந்தகோபர் மாளிகையாகவும், அங்கு எழுந்தளியிருக்கும் இறைவனைக் கிருஷ்ணனாகவும் நினைத்து இடைப்பெண்கள் நோற்ற நோன்பை நோற்கின்றாள். அந்நோன்பைப் பற்றித் திருப்பாவையிலும் கூறப்பட்டுள்ளது.

இந்த மார்கழியில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பின் போது விடியும் முன்பே எழுந்து விடுவார்கள். தனது தோழிமார்களான மற்ற கன்னி பெண்களையும் தூக்கம் கலைத்து எழுப்பிக்கொண்டு நீராடி அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று இறைவனைத் துதித்து வழிபடுவதுதான் பாவை நோன்பின் முக்கிய அம்சம்.

பாவை நோன்புக் காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை , நாச்சியார் திருமொழி மற்றும் ஆழ்வார்கள் பாசுரங்களை முழுவதும் அதிகாலையில் பாடி வர  வேண்டும்

நோன்பு காலத்தில் கன்னிப் பெண்கள் திருப்பாவை பாசுரத்தில் இரண்டாம் பாடலில் உள்ளது போல நெய் மற்றும் பால் உண்ணாமல் ,கண்ணுக்கு மையிடாமல் தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாமலும், தன்னை அலங்கரித்துக்கொள்ளும் எந்த செயலையும் செய்யாமல் இறைசிந்தனையில் இந்த பாசுரங்களை தான் பாட வேண்டும். பெருமாளையும் ஆண்டாளையும் வழிபட வேண்டும் . இப்படி மார்கழி மாதம் முழுவதும் சரியாக செய்து வந்தால் கன்னிப்பெண்களுக்கு மனதில் நினைத்தது போல அழகான கணவன் அமைவான் என்பது ஆன்மிக நம்பிக்கை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews