குடியரசு தின விழா அணிவகுப்பு: ராஜபாதை தொடங்கி இந்தியா கேட் வரை அணிவகுப்பு!
ஜனவரி 26ம் தேதி இன்றைய தினம் 73 வது குடியரசு தினம் நம் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த 73 வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் தேசியக்கொடி ஏற்றினார். இந்த விழாவில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இன்று காலை ராஜபாதையில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. குடியரசு தின விழா அணிவகுப்பில் டெல்லி ராஜபாதையில் தொடங்கி இந்தியா கேட் வரை நடைபெற்றது. தேசிய கொடியை ஏற்றி வைத்த ஜனாதிபதி ராம்நாத் முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
1965 மற்றும் 1971 போரில் பயன்படுத்திய பீரங்கிகள், தற்போதைய நவீன ஆயுதங்கள் அணிவகுப்பில் இடம்பெற்றன. சென்னை ஆவடியில் தயாரான அர்ஜூன் ரக பீரங்கியும் டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டது.
டெல்லி குடியரசு தினவிழாவில் விமானப்படையை சேர்ந்த 75 போர் விமானங்களும் சாகசம் புரிந்தது. கொரோனா பரவலால் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு ரத்து செய்யப்பட்டது.
