நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான ஒரு கோவிலில் உள்ள மரகத லிங்கம் கடந்த 2016ல் காணாமல் போனது.
இந்த நிலையில் தஞ்சாவூரில் அருளானந்த நகர் 7-வது குறுக்குத் தெருவில் உள்ள வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிவன் சிலை பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த வீட்டை சோதனையிட்டனர்.
அங்கு இருந்த அருண்பாஸ்கர் என்பவரிடம் விசாரணை செய்தபோது தனது தந்தை ஒரு சிவன் சிலையை வைத்திருப்பதாக கூறினார்.
அது ஒரு தொன்மையான பச்சை மரகதலிங்கம் எனவும் தெரியவந்தது. இதையொட்டி அருண்பாஸ்கரின் தந்தை சாமியப்பனிடம் விசாரணை நடைபெற்றது.
அந்த தொன்மையான பச்சை மரகத லிங்கம் வங்கி லாக்கரில் இருந்து எடுத்து வந்து போலிசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை, அங்கீகாரம் பெற்ற மரகதக்கல் மதிப்பீட்டாளர்களிடம் கொடுத்து பார்த்தபோது அதன் மதிப்பு ரூ.500 கோடிக்கு மேல் இருக்கும் என கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருக்குவளை கோவிலில் காணாமல் போன லிங்கம் தானா என விசாரணை நடைபெற்று வருகிறது.