Connect with us

தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து நமக்கு தெரியாத பல உண்மைகள் !!

kuttys

Special Articles

தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து நமக்கு தெரியாத பல உண்மைகள் !!

தாய்ப்பாலின் மகத்துவம்

 

தாய்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்ப்பால் ஏனென்றால் இந்த உலகில் அந்த தாய்ப்பாலுக்கு சரிசமான ஒன்று எதுவுமில்லை பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும், பெரும்காரணமாக இருப்பது தாய்ப்பால் ஒன்றே

 

உலகத்தாய்ப்பால் ஊட்டும் வாரத்தை ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டமானது உலகெங்கும் 170க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் நடைபெறுகிறது.

 

தாய்ப்பாலின் சத்துக்கள்:

 

குழந்தை பிரசவமானவுடன் முதல் நாளான்று உருவாகும் சீம்பால் அடர்த்தியான சத்துக்களை கொண்டது அது மட்டுமல்ல பாக்டீரியா வைரஸ் போன்ற கிருமிகளில் இருந்து தாக்குதலை எதிர்கொள்கிறது.

 

தாய்ப்பால் புகட்டுவதால் சேய்க்கு மட்டும் பயன் கிடைப்பதில்லை அது தாய்க்கும் நல்ல பயன் தருகிறது, தாயின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் தாக்கத்திலிருந்தும் காக்கப்படுகிறது

 

குழந்தைகளுக்கு கட்டாயம் 6- மாதங்களுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கவேண்டும் அதற்கு பிறகு தான் பிற உணவுகள் சேர்த்து வழங்கப்பட வேண்டும் அதிலும் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது.

 

இது குழந்தைகளின் சிறுவயதில் ஏற்படக்கூடிய நோய்கள் மட்டுமல்ல பிற்காலத்தில் வரக்கூடிய நோய்களிலிருந்தும் தடுக்கும் ஆற்றல் இதற்கு இருக்கிறது. சத்து மிகுந்த தாய்ப்பாலில் உள்ள என்ûஸம்கள்; மற்றும் நோய் எதிர்ப்புச்சத்துக்கள் ஆகியவை குழந்தைகளது மென்மையான உடலை பாதுகாத்து நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரித்து பரிபூரண வளர்ச்சியை அளிக்கும் ;

 

தாய்ப்பாலில் ஊட்டச்சத்து மிகுந்து இருப்பதுடன் அது குழந்தைக்கு எளிதாகச் செரிக்க கூடியதாகும் மேலும் தாய்ப்பாலை குடித்து வளரும் குழந்தைக்கும்; அதன் தாய்க்கும் இடையே உள்ள பாசம் அதிகரிக்கும்.

 

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் நரம்பு மண்டலத்துக்கும் வலு சேர்க்கக்கூடிய, எளிதில் செரிக்கும் புரதம், கொழுப்பு, கால்சியம், இரும்பு, மாவுச்சத்து இவற்றோடு விட்டமின்களும் தாய்ப்பாலில் அதிகம் நிறைந்துள்ளன.

 

குழந்தைக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளில் இருந்து தாய்ப்பாலில் உள்ள சத்துகள் காப்பதோடு, டயாபடிஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களை அண்டவிடாமல் தடுக்கும்

 

தாய்ப்பால் சுரப்புக்குத் தாய்தான் பொறுப்பு!

 

தாய்ப்பால் அமிர்தம், சீம்பால் அதனினும் அமிர்தம். அந்த அளவுக்கு மகத்துவம் வாய்ந்த தாய்ப்பால்

 

இந்தியாவில் 41% குழந்தைகளுக்குத்தான் சீம்பால் கிடைக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. குறிப்பாக, தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 47% குழந்தைகளுக்குத்தான் சீம்பால் கிடைக்கிறது .

 

அறுவைசிகிச்சை செய்துகொண்ட தாய்மார்களால் நிச்சயம் சீம்பால் கொடுக்க முடியும், கொடுக்க வேண்டும்.

 

தாய்ப்பால் சுரப்பு என்பது மனத்துடன் சம்பந்தப்பட்ட விஷயமும்கூட. அம்மா தாய்மையில் பூரிக்கும்போது, பால் சுரப்புக்கான ஹார்மோன் அவருக்குத் தூண்டப்பட்டு, குழந்தைக்குத் தேவையான அளவு பால் சுரக்கும்.

 

பிரசவத்துக்குப் பின்னான முதல் ஒரு மணி நேரத்தில், பால் கொடுக்கும் எண்ணம் அந்தத் தாய்க்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம். அந்த எண்ணம் குறைவாக இருக்கும்பட்சத்தில், பால் சுரப்பும் குறைவாகத்தான் இருக்கும்.

 

தாயின் முலைக்காம்பில் குழந்தையின் வாயை வைத்துவிட்டாலே, அழகாக பால்குடிக்க ஆரம்பித்துவிடும். குழந்தை எந்த அளவுக்கு முலைக்காம்பை நன்கு பற்றிக்கொண்டு உறிஞ்சுகிறதோ, அந்த அளவுக்கு தாய்க்கு பால் சுரப்பு அதிகரிக்கும். மருத்துவ மொழியில் இதை, ‘பிரெஸ்ட் க்ரால் (Breast Crawl)’ என்போம்.

 

தாய்ப்பால் வங்கி… !

 

தாய்க்கு ஏதேனும் உடல் குறை இருந்தால், பால் சுரப்பு இல்லாமல் போவது, குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளை இன்குபேட்டரில் வைக்க நேரிடுவது போன்ற காரணங்களால், சில தாய்மார்களால் தங்கள் குழந்தைக்கு சீம்பால் தரமுடியாமல் போகலாம்.

 

சீம்பால் மட்டுமன்றி, தொடரும் நாள்களில் தாய்ப்பால் கொடுப்பதிலும் சிலருக்கு சிக்கல் நீடிக்கலாம். இதுபோன்ற சூழலில், இவர்களுக்கு தாய்ப்பால் வங்கிகள் வரமாக அமையும்.

 

தன் குழந்தைக்குத் தேவையான அளவு பால் சுரப்பு இல்லாத தாய்மார்கள், தாய்ப்பால் வங்கியிலிருந்து தாய்ப்பால் பெற்று, தங்கள் குழந்தைகளுக்குப் புகட்டலாம்.

 

இந்த வங்கியில், தன் குழந்தைக்குத் தேவையான அளவுக்கும் அதிகமாக பால் சுரக்கும் தாய்மார்கள் சேகரித்துத் தரும் தாய்ப்பால் பதப்படுத்தப்பட்டு, சேமிக்கப்பட்டு, தேவையுள்ள தாய்மார்களுக்கு வழங்கப்படும்.

 

தாய்ப்பால் சேமிக்கப்படும் முறை :

 

* தாய்ப்பால் தானம் தர முன்வரும் தாய்மார்களுக்கு, தானமளிக்கும் முன்னர் ஹெச்.பி.வி மற்றும் ஹெச்.ஐ.வி பரிசோதனைகள் செய்யப்படும். பின்னர், அவர்களின் மார்பகங்கள் மற்றும் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படும்.

 

* எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லாத தாய்மார்களிடமிருந்து, பிரெஸ்ட் பம்ப் உதவியுடன் தாய்ப்பால் தானம் பெறப்படும்.

 

* தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பால், பதப்படுத்தப்படும்.

 

* ஒரு தாய், ஒரு முயற்சியில் சராசரியாக 50 மி.லி வரை பாலை தானமாக அளிக்க முடியும். ஆனால், பதப்படுத்துதலுக்கு குறைந்தபட்சம் 200 மி.லி தாய்ப்பாலாவது தேவை என்பதால், அந்த அளவு பால் அவரிடமிருந்து கிடைக்கும்வரை காத்திருந்து, பின்னர் அது குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும். தொடர்ந்து அந்தப் பால் சாம்ப்பிள், தரப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். பிரச்னை எதுவும் இல்லையென உறுதிசெய்யப்பட்ட பின், பால் 62 டிகிரியில் சூடுபடுத்தப்படும். அப்போது, ஒருவேளை அதில் பாக்டீரியாக்கள் இருந்தால் அழிந்துவிடும். அடுத்ததாக, மீண்டும் பால் தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். பின்னர், மைனஸ் 20 டிகிரியில் பால் முழுவதுமாக உறைய வைக்கப்படும்.

 

* தாய்ப்பால் வங்கியில் இருந்து பாலைப் பயன்படுத்த எடுக்கும்போது, வாட்டர் பாத் என்ற முறை மூலமாக அந்தப் பால் அறை வெப்பநிலைக்குக் கொண்டுவரப்பட்டு, தேவைக்கேற்ப தாய்மார்களிடத்தில் பாட்டிலில் அடைத்து வழங்கப்படும். அறை வெப்பநிலைக்குக் கொண்டுவரப்பட்ட தாய்ப்பாலை, அடுத்த 24 மணி நேரத்துக்குள் அவர்கள் உபயோகப்படுத்திவிட அறிவுறுத்தப்படும்.

 

* மேலே குறிப்பிட்ட வெப்பநிலை செய்முறைகள், தாய்ப்பாலில் கிருமிகள் மற்றும் தொற்றுகள் இருந்தால் அவற்றை முற்றிலும் அழிப்பதோடு, அவை மீண்டும் ஏற்படாமல் இருக்கவும் செய்யும். எனவே, தானமாகக் கிடைக்கப்பெறும் தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்குறைபாடோ, கிருமித் தாக்கமோ இருக்காது… தாய்மார்கள் பயப்பட வேண்டாம்.

 

எத்தனை மாதங்கள்  தாய்ப்பால் தானம் அளிக்கலாம்?

 

தாய்க்கு எவ்வளவு காலம் பால் சுரக்கிறதோ, அதுவரையில் தானமளிக்கலாம். சில தாய்மார்கள், குழந்தைக்கு அதிகபட்சம் இரண்டு வயதாகும் வரையில்கூட பால் புகட்டுவதுண்டு. அப்படியானவர்கள், அதுவரை தானமளிக்கலாம்.

 

தாய்ப்பால் குறைவாக சுரக்க காரணம் :

 

அதற்கு மனஅழுத்தம், தூக்கமின்மை, சத்துள்ள ஆகாரம் உட்கொள்ளாதது, உடல் வறட்சி என்று பல காரணங்கள் இருக்கும். தாய் என்ன சாப்பிடுகிறாரோ அதுதான் குழந்தைக்குச் சத்தாக சென்று சேரும். அதனால் தாய்மார்கள் குழந்தைகளுக்காகவாவது சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

உணவு பொருட்கள் ஒரே சமயத்தில் எடுத்துக் கொள்ளலாமல் இடைவெளி விட்டு விட்டு எடுத்து கொள்வது நல்லது.

 

சில உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வதின் மூலம் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். அவை..

தினமும் முட்டை, மீன் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம். அசைவம் சாப்பிடதவர்கள் காய்கறிகள், பழங்கள் அதிகம் உணவில் எடுத்து கொள்ளலாம்.

 

தாய்ப்பால் சுரக்க பயனுள்ள சில வைத்திய குறிப்புகள்:

 

*தாளிக்கீரை இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து சாறு பிழிந்து அந்த சாற்றை குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.

 

*பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாம்.அஸ்வகந்தி இலைத் துளிர்களைப் பறித்து எண்ணெயில் வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் பால் சுரக்கும்.

 

*பச்சை வேர்கடலை மென்று சாப்பிடலாம்.

 

*ஆலம் விழுது, துளிர் விதை இவ்விரண்டையும் எடுத்து மைய அரைத்து, 5 கிராம் எடுத்து பசும்பாலில் கலந்து காலையில் மட்டும் உட்கொண்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

 

* கோவை இலையை வெள்ளைப் பூண்டுடன் நெய்யில் வதக்கி தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

 

*ஆல்வல்லி கிழங்கு வேக வைக்காமல் பச்சையாக மென்று தின்னலாம்.

 

* அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

 

*பப்பாளிக் காய்யை தோல் நீக்கி கடலைப் பருப்புடன் சேர்த்துக் கூட்டாகச் சமைத்துண்டால் பால் பெருகும்.

 

*சதகுப்பைக் கீரையை உணவில் அதிகமாக சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

 

*துளசி இலைகளைப் புட்டு போல் அவித்துக் கசக்கி பிழிந்துச் சாற்றை தினமும் ஒரு ஸ்பூன் அளவு குடித்து வர தாய்ப்பால் அதிகரிக்கும். இதயமும் பலமடையும்.

 

*அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.

 

*உணவில் பூண்டு, உளுந்து, பெருங்காயம், வெந்தயம், செவ்வாழைப் பழம், உருளைக் கிழங்கு பயன்படுத்தப் பால் பெருகும்.

 

*வெட்டிவேர் சர்பத் அருந்த தாய்ப்பால் பெருகும்.சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைச் கலந்து காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் சுரக்கும்.

 

*இரும்புச்சத்து வைட்டமின், அதிகமுள்ள உணவுப்பொருட்களான அவல் கோதுமை சோயாபீன்ஸ், சுண்டைக்காய், கொத்தமல்லி, பேரீச்சம் பழம், திராட்சை பழம், வெல்லம், கேழ்வரகு, சீரகம் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது குழந்தைக்கு தேவையான அளவு பால் கிடைக்கும்.

 

*அதிகம் பூண்டு சேர்த்து தயாரிக்கப்பட்ட சூப் மிதமான சூட்டுடன் அருந்தி வந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும்.

 

*கேழ்வரகை முளைக்கட்டி இடித்து கஞ்சியாகச் குடிக்க வேண்டும். இதில் முளைகட்டிய வெந்தயப் பொடியை சேர்த்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Special Articles

To Top