ஆயிரம் திரை கண்ட அபூர்வ பெண்மணி ஆச்சி மனோரமா பிறந்த தினம் இன்று

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகைகளுக்கு என பெரிய அங்கிகாரம் இல்லாத காலம்.. நகைச்சுவை நடிகைகள் ஆண் நகைச்சுவை நடிகர்களுக்கு துணையாக ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து போவார்.. அந்த சூழ்நிலையில் நகைச்சுவை நடிகைகளுக்கு என தனி அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் உண்டாக்கி கொடுத்தவர் நமது ஆச்சி மனோரமா.

ஆச்சி மனோரமா மன்னார்குடி பூர்வீகமாக கொண்டவர். தன்னுடைய இள வயதில் குடும்பத்தாரோடு காரைக்குடிக்கு அருகே உள்ள பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தார். இவரது இயற்பெயர் கோபி சாந்தா. 12 வயதில் தன்னுடைய நடிப்புலக வாழ்க்கையை தொடங்கியவர்.

Achi Manorama

ஆரம்ப காலத்தில் நாடக நடிகையாக பல நாடக மேடைகளில் நடித்து புகழ்பெற்றவர் சிங்கள படம் ஒன்றின் மூலம் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். 1958 ஆம் ஆண்டு “மாலையிட்ட மங்கை” என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். 1963 ஆம் ஆண்டு “கொஞ்சம் குமரி” என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ் திரையுலகில் மட்டும் அல்லாமல் தென்னிந்தியாவின் பல மொழிகளிலும் , இந்தி, சிங்களம் மொழிகளிலும் நடித்து பெயர் பெற்றார்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என அக்கால நடிகர்களுடன் மட்டுமின்றி ரஜினி, கமல் எனத் தொடர்ந்து விஜய் , அஜித், சூர்யா என அடுத்த தலைமுறை நடிகர்கள் என ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர் நமது ஆச்சி மனோரமா.

அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்டிஆர் என ஐந்து முதல்வர்களுடன் நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடித்த ஒரே நடிகை இவர்.

ஆச்சி நடிகை மட்டும் அல்ல மிகச் சிறந்த பாடகியாகவும் தமிழ் திரையுலகில் இருந்துள்ளார். “வாத்தியாரே வூட்டாண்ட….” “பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே…” “தெரியாத நோக்கு…” “முத்துக்குளிக்க வாரீகளா…” என இவர் பாடிய பாடல்கள் இன்றும் நிலைத்திருக்கிறது.

கிட்டத்தட்ட 1500 திரை படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் உலக சாதனை படைத்தவர். பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, மலேசியா அரசால் வழங்கப்படும் டத்தோ விருது, தேசிய விருது, அண்ணா விருது, என்.எஸ்.கே விருது எம்.ஜி.ஆர் விருது, ஜெயலலிதா விருது என்று பல விருதுகளை வாங்கிக் குவித்தவர் நம் மனோரமா.

ஜில் ஜில் ரமாமணி, கண்ணாத்தா, கண்ணம்மா என்று இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் இன்றும் ரசிகர் மனதில் நிறைந்திருக்கிறது.

தன்னுடைய இறுதி மூச்சு வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே இவரது ஆசையாக இருந்து வந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு மாரடைப்பால் மறைந்தாலும் தனது கதாபாத்திரங்கள் மூலம் மறையாமல் வாழ்ந்து வருகிறார்.

இன்று (மே 26) இந்த ஆயிரம் திரைக்கண்ட அபூர்வ பெண்மணி பிறந்த தினம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...