கணவன், மனைவி கடத்தல்; சினிமா பாணியில் நடந்த அதிரடி திருப்பம்!

மணப்பாறையில் கணவன் மனைவி கடத்தல் சம்பவத்தில் கடத்தல் கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆபிசர்ஸ் டவுன் பகுதியில் வசித்து வருபவர் பழனியப்பன் (வயது 53), சந்திரா (வயது 42) தம்பதியினர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர்கள் சென்னை பொன்னேரி பகுதியில் நிலம் வாங்குவதற்காக கணவன் மனைவி இருவரும் 23ம் தேதி காலை தங்களது காரில் சென்னைக்கு சென்றனர்.

திருச்சி, சமயபுரத்தை அடுத்துள்ள ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்கச் சென்றபோது இருவரையும் 6 பேர்கள் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து தங்களை போலீஸ் எனக்கூறி காரில் கடத்தினர். மேலும் அவர்களது மகன் கலைச்செல்வனிடம் 30 லட்சம் ரூபாய் கொடுத்தால் இருவரையும் விடுவிப்பதாக கூறியுள்ளனர்.

மணப்பாறைக்கு வந்து பணத்தை வாங்கிக்கொள்வதாக கூறியதையடுத்து மணப்பாறை போலீசார் உஷார் படுத்தப்பட்டு  கடத்தல் கும்பலை சேசிங் செய்தனர். கலைச்செல்வனிடம் பணம் வாங்கவந்தபோது கடத்தல் கும்பலைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

கணவன் மனைவி இருவரையும் அவர்களிடமிருந்த 10 சவரன் நகை மற்றும் 40000 பணத்தை பறித்துக்கொண்டு கடத்தல்காரர்கள் திண்டுக்கல்லில் இறக்கிவிட்டுச் சென்றனர். இச்சம்பவம் குறித்து கலைச்செல்வன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மணப்பாறை போலீசார் கடத்தலில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம், ஆராவயலைச் சேர்ந்த பிரேம், கணேசன், கார்த்திக் மற்றும் இரண்டு பேர் என 5 பேரை தேடி வந்தனர்.

இந்நிலையில் போலீசாரிடம் பிடிபட்ட காளிதாஸ் என்பவரின் நண்பர்களாக மணப்பாறை அருகே உள்ள தொப்பாநாயக்கன்பட்டியைச்‌ சேர்ந்த ராஜகோபால் (வயது 46), அசோக் குமார் (வயது 56) இருந்துள்ளதும் இதனால் அசோக்குமார் என்பவரது வீட்டினில் கடத்தல் கும்பலை ஒரு வாரமாக தங்க வைத்து அடைக்கலம் கொடுத்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள பிரேம், கணேசன், கார்த்திக் உள்ளிட்ட ஐவரையும் தேடி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.