நம்ம எல்லாருக்குமே சின்ன வயசுல ஏதாவது ஒரு ஆசை இருக்கும். ஆனால் நாளடைவில் நாம் வளர வளர அந்த ஆசையும் மாறிவிடும். சிலர் மட்டுமே பிடிவாதமாக தான் ஆசைப்பட்டதை அடைய வேண்டும் என முயற்சிகளை மேற்கொள்வார்கள். அதில் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால் வெற்றி பெற்ற ஒருவரை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம்.
பிரேசில் நாட்டை சேர்ந்த ஜெனிசிஸ் கோம் என்ற நபருக்கு சிறு வயது முதலே ஹெலிகாப்டரை இயக்க வேண்டும் என ஆசை இருந்து வந்துள்ளது. ஆனால் அவருக்கு அதற்கான வசதி இல்லை. இருப்பினும் தனது ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்த ஜெனிசிஸ் சொந்தமாக ஒரு ஹெலிகாப்டரையே தயார் செய்து விட்டார்.
ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை தாங்க பழைய கார், மோட்டார் சைக்கிள், லாரி, மிதிவண்டி போன்ற வாகனங்களின் உதிரி பாகங்களை கொண்டு இவரே ஹெலிகாப்டர் ஒன்றை வடிவமைத்துள்ளார். மேலும் இந்த ஹெலிகாப்டர் வெற்றிகரமாக விண்ணில் பறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விமானம் வோல்க்ஸ்வேகன் பீட்டில் இன்ஜின் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாம். வாகனங்கள் ஓடும் சாலையை தனது விமானத்தின் ஓடு தளமாக பயன்படுத்தி ஜெனிசிஸ் தனது ஹெலிகாப்டரை விண்ணில் பறக்க வைத்து கனவை நினைவாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தை அருகில் இருந்த மக்கள் படம்பிடித்து சோசியல் மீடியாக்களில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் இதுகுறித்து பேசிய ஜெனிசிஸ், “விரைவில் புது ஹெலிகாப்டரை தயாரித்து பறக்க வைப்பதே எனது லட்சியம்” என கூறியுள்ளார்.