நேரம் ரொம்ப நல்லாருக்கு… ஆனா… பிரச்சனை ஏன் வருது? உங்களுக்காக வருகிறது மகாளய அமாவாசை

மகாளய அமாவாசை என்பது ரொம்ப ஆற்றல் வாய்ந்தது. குறிப்பாக ஆவணி மாதம் வருகின்ற பௌர்ணமி முடிந்த பிரதமை திதியிலிருந்து புரட்டாசி மாதம் அமாவாசை வரையிலும் வருகின்ற 15 திதிகளுமே சிறப்பு வாய்ந்தது. இதை மகாளய புண்ணிய காலம் என்பர். தற்போது நடந்து வரும் காலம் இதுதான்.

இந்த 15 நாள்களிலுமே நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். குறிப்பாக தை, ஆடி, புரட்டாசி அமாவாசைகள் ரொம்ப ரொம்ப சிறப்பு வாய்ந்தது. ஆனால் புரட்டாசி அமாவாசையைத் தான் மகாளய அமாவாசை என்று சொல்வர்.

மற்ற அமாவாசைகளில் நாம் தர்ப்பணம் கொடுக்காமல் இருந்தாலும் இந்த மகாளய புண்ணிய காலத்தில் அல்லது மகாளய அமாவாசையில் தர்ப்பணம் செய்வது சாலச்சிறந்தது. இதுவரை கொடுத்த எல்லா அமாவாசைகளிலும் தர்ப்பணம் கொடுத்த புண்ணிய பலனை இந்த ஒரு நாளில் கொடுக்கும்போது பெறலாம்.

தர்ப்பணம் யார் யாரெல்லாம் செய்யலாம் என்றால் அனைவருமே செய்யலாம். சில வீடுகளில் எப்போது பார்த்தாலும் பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். குழந்தையின்மை, வியாபார நஷ்டம், தொடர்ந்து சிக்கல்கள், மனநிம்மதியின்மை என ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே இருக்கும்.

பணம் இருந்தாலும் பிரச்சனை தான். இல்லாவிட்டாலும் பிரச்சனை தான் என்று இருக்கும். அதை சிலர் நேரம் சரியில்லை என்பர். சிலருக்கு நேரம் நல்லாருந்தாலும் பிரச்சனை வரும். இதற்குக் காரணம் முன்னோர்களின் ஆசியானது பூரணமாகக் கிடைக்கவில்லை என்பதுதான்.

இந்தக் காலகட்டத்திலே நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய காரியத்தை செய்யும் போது வாழ்க்கையில் உண்டான அனைத்துத் தடைகளும் நீங்கி வசந்தம் வீசும். இது அனுபவப்பூர்வமான உண்மை.

amavasai 3
amavasai 3

இந்த வருடத்திற்கான மகாளய அமாவாசை வருகிற 25.9.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இந்தக்காலகட்டங்களில் ராமேஸ்வரத்தில் எல்லாம் கூட்டம் அலைமோதும்.

கடற்கரை அருகில் உள்ள சிவாலயங்களில் சென்று முறையாக தர்ப்பணம் செய்யலாம். அல்லது புரோகிதர்கள் மூலமாகத் தர்ப்பணம் செய்யலாம். தர்ப்பணம் கொடுக்காத சிலர் வீட்டில் படையல் போடுவார்கள். இது அமாவாசை படையல்.

இவங்க காலையில் எழுந்து குளித்து விட்டு பெரியவர்களை மனதில் நினைத்து அவர்கள் பயன்படுத்திய பொருள்களையோ அல்லது அவர்களுக்காக உடை எடுத்து வைத்து சாப்பாடு செய்வர்.

அன்றைய தினத்தில் பூடு, இஞ்சி, வெங்காயத்தை எல்லாம் நம் உணவில் தவிர்த்துக் கொள்வது நலம். முன்னோர்களுக்காக விரதம் இருந்து படையல் போடுவர். அவர்களுக்காக வேண்டிக் கொள்வர். சிலர் படங்களை வைத்து படையல் போடுவர்.

padaiyal
padaiyal

படையல் போட்டதும் அந்த சாதத்தின் ஒரு பகுதியைக் காக்கைக்கு உணவாக வைப்பர். காக்கை வந்து உணவை எடுத்து விட்டால் பூரண அனுக்கிரகத்தைப் பெற்றுவிட்டதாக ஐதீகம்.

காகம் சாப்பாடு எடுத்துவிட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்பது ஐதீகம். சில இடங்களில் காகம் எடுக்கவில்லை என்றால் ஏதேனும் குறைகள் இருக்கும். முறையாக தர்ப்பணம் செய்து விட்டால் அந்த குறையும் நீங்கும் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்க முடியவில்லை என்றால் அதற்கு முன்னர் உள்ள அந்த மகாளய புண்ணிய காலமான 15 நாள்களில் ஏதேனும் ஒருநாளில் கொடுக்கலாம். சிரார்த்தம் அல்லது திதி என்பது பெரியோர்கள் இறந்த தமிழ் மாதத்தில் வருகிற திதியிலிருந்து கொடுப்பது. தர்ப்பணம் என்பது அப்படி இல்லை. இது அமாவாசை திதிகளில் குறிப்பாக தை, ஆடி, புரட்டாசை அமாவாசைகளில் கொடுப்பது.

இந்தக்காலகட்டத்தில் நாம் கொடுக்கக்கூடிய தர்ப்பணம் நேரடியாக அவர்களை சென்றடையுமாம். இது மாதிரி நாம் செய்தால் பெரியோர்களின் பூரண அருளாசி கிடைக்கும்.

amavasai
amavasai

அன்றைய தினம் பின்னிரவு சுமார் 4 மணி வரை அமாவாசை நீண்டு இருக்கும். இது 25ம் தேதி. அப்படி என்றால் அன்றைய தினம் முழுவதுமே வழிபாடு செய்வது உத்தமம். மதிய நேரத்தில் படையல் போட்டு வழிபாடு செய்யலாம். இது முன்னோர்களின் ஆசியை நிச்சயம் பெற்றுத் தரும்.

அன்று வெளியில் எங்கும் போய் சாப்பிடக்கூடாது. சவரம் செய்யக்கூடாது. நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளக்கூடாது. நகம் வெட்டுதல் கூடாது. முக்கியமாக முன்னோர்களை வழிபாடு செய்யும் போது கோலம் போடுதல் கூடாது.

வழிபாடு முடிந்ததும் ஏழை எளியவர்கள் வயதான தம்பதியர், வயதானோருக்கு அன்னதானம் செய்வது முன்னோர்களின் பூரணமான ஆசியைப் பெற்றுத் தரும். ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு உதவலாம். வயதானோரின் மருத்துவச் செலவுக்கு உதவலாம். முன்னோர்களின் பெயரால் நற்காரியங்கள் செய்யும்போது கண்டிப்பாக அவர்களின் ஆசியானது கிடைக்கும்.

எப்பவுமே நல்ல நாள்கள், மாதப்பிறப்பு ஆகிய நாள்களில் முக்கியமாக நாம் செய்ய வேண்டியது முன்னோர் வழிபாடு தான். அடுத்து குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு. இவற்றை முறையாக செய்து வந்தால் வாழ்க்கையில் ஒரு உன்னத நிலை ஏற்படும். நேரம் சரியில்லை என்றாலும் முன்னோர்களின் வழிபாட்டைத் தொடர்ந்து செய்தால் அவர்கள் நமக்கு அரணாக நின்று உதவுவர்.

குடும்பப் பிரச்சனைகள் எவ்வளவு வந்தாலும் அதை சூரியனைக் கண்ட பனிபோல விலகி ஓடச் செய்துவிடுவார்கள். முன்னோர்கள் அவ்வளவு ஆற்றல் வாய்ந்தவர்கள். நம் குடும்பத்திற்கு அரணாக இருப்பவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் இந்த மகாளய அமாவாசையைத் தவற விடாதீர்கள்.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews