மகா சிவராத்திரியின் மகிமைகள்!

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தன்னுடைய முற்பிறவி கர்ம வினைகள் அனைத்தையும் இறை வழிபாடு (மந்திர ஜெபம், யாகங்கள் நடத்துவது, உழவார பணி) அன்னதானம், முன்னோர்கள் தர்ப்பணம், ஆன்மிக பிரச்சாரம் போன்றவை மூலமாக படிப்படியாக குறைப்பதற்காகவே பிறவி எடுத்து இருக்கிறோம்.

பிறந்தது முதல் ஏழு வருடங்கள் வரை இந்த பிறவியில் நாம் செய்யவேண்டிய தெய்வீக லட்சியங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும். அதன் பிறகு படிப்படியாக மறந்துவிடும் என்று சித்தர் உபதேசங்கள் தெரிவிக்கின்றன.

நாம் வாழும் பூமியை கர்ம பூமி என்று கூறுகிறார்கள். இதற்கு சரியான அர்த்தம் என்னவென்றால் நம்முடைய ஒவ்வொரு செயலும் பாவக் கணக்கில் அல்லது புண்ணியக் கணக்கில் சேரும் என்று அர்த்தம். பாவபுண்ணியம் பற்றிய கர்ம விளக்கத்தை நம்முடைய தமிழ் மொழியில் ஏராளமான நூல்களில் காணலாம் .

திருமந்திரம், திருவாசகம், நாலாயிரத் திவ்வியபிரபந்தம், திருக்குறள், ராமாயணம், மகாபாரதம், கருட புராணம், விதுர நீதி, சுக்கிர நீதி, புலிப்பாணி ஜோதிடம் போன்றவைகளில் பாவ புண்ணியம் பற்றிய விளக்கங்கள் இருக்கின்றன.

சதுர்த்தி அன்று விநாயகருக்கு பூஜை, பஞ்சமியில் செய்யப்படும் வராஹி மந்திர ஜெபம் மற்றும் பூஜை, சஷ்டியன்று முருகப்பெருமானை எண்ணி செய்யப்படும் விரதம், அஷ்டமியில் செய்யப்படும் பைரவர் வழிபாடு, நவமியில் செய்யப்படும் துர்க்கை அபிஷேகம் மற்றும் துர்க்கை முன்பாக செய்யப்படும் யாகங்கள் மற்றும் மந்திர ஜபம், தசமியில் செய்யப்படும் பாலாம்பிகை என்ற பால திரிபுரசுந்தரி பூஜை, ஏகாதசி அன்று பித்ருக்களின் தெய்வமாக இருக்கும் மஹா விஷ்ணுவை எண்ணி இருக்கும் விரதம், துவாதசி அன்னதானம், பிரதோசம் அன்று செய்யப்படும் நந்தி பகவானுக்கு அபிஷேகம், சிவராத்திரி கிரிவலம், அமாவாசை தர்ப்பணம் போன்ற அனைத்தும் நம்முடைய கர்மவினைகளை படிப்படியாக குறைப்பதற்காக சித்தர்களால் நமக்கு உபதேசம் செய்யப்பட்ட ஆன்மீக வழிபாட்டு முறைகள் ஆகும்.

மகா சிவராத்திரி

மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி திதி அன்று மகா சிவராத்திரி வருகிறது. ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரி அன்று தமிழ்நாடு மற்றும் இலங்கை முழுவதும் குலதெய்வம் கோயிலுக்கு செல்வது நம் அனைவரது வழக்கம் ஆகும். ராமாயண காலத்திலிருந்து இந்த மரபு நம்முடைய ஆன்மீக தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கிறது.

மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் குலதெய்வத்தின் நினைவோடு குலதெய்வம் கோயிலில் ஏதாவது ஒரு மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும். மறுநாள் அமாவாசை திதி வரும். அமாவாசை திதி இருக்கும்போது ஒரு முகூர்த்த நேரம் வரை (90 நிமிடங்கள்) குலதெய்வத்திடம் “நமக்கு என்ன தேவை?” என்பதை மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு வேறு எந்த கோயில்களுக்கும் செல்லலாமலும் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லாமலும் நம்முடைய வீட்டுக்கு செல்ல வேண்டும்.

மகா சிவராத்திரிக்கு மறுநாள் பகல் முழுவதும் எக்காரணம் கொண்டும் தூங்காமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் கடந்த ஒரு வருடமாக நாம் அறிந்தும் அறியாமலும் செய்த புண்ணியச் செயல்கள் நம்முடைய பிறவி கணக்கில் பதிவு செய்யப்படும். அதே சமயம் கடந்த ஒரு வருடத்தில் நாம் செய்த அனைத்து பாவங்களும் மகா சிவராத்திரி இரவில் இறை நினைவோடு, குலதெய்வ நினைவோடு விழித்து இருந்தால் நம்மை விட்டு நீங்கி விடும்.

மகா சிவராத்திரியன்று இரவில் தூங்கினாலும் சரி அல்லது மறுநாள் பகலில் தூங்கினாலும் சரி கடந்த ஒரு வருடம் நாம் செய்த புண்ணியம் நம்மை விட்டு நீங்கி விடும். இது பற்றிய விளக்கங்கள் சிவபுராணத்தில் விரிவாக உள்ளன.

பிலவ வருடத்தில் மகா சிவராத்திரி 28.2.2022 திங்கட்கிழமை இரவு 2:21மணிக்கு ஆரம்பிக்கிறது. 1.3.2022 செவ்வாய்க்கிழமை அன்று இரவு 12.44 வரை இருக்கிறது.

மகா சிவராத்திரி திதி ஆரம்பித்தது முதல் முடியும் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பது நன்று. இன்றைய காலகட்டத்தில் நம்முடைய வேகமான வாழ்க்கையில் அவ்வாறு விரதமிருப்பது கடினமாகும். அவ்வாறு சிவராத்திரி விரதம் இருக்க இயலாதவர்கள் இந்த சிவராத்திரி திதி இருக்கும் நேரம் முழுவதும் திரவ உணவுகள் அருந்திக்கொண்டு விரதமிருப்பது நன்று. (இளநீர், மோர், பழச்சாறு ,கஞ்சி ,கூழ்).

போதுமான விடுமுறையும் சந்தர்ப்பமும் உள்ளவர்கள் மகாசிவராத்திரி திதி ஆரம்பித்தது முதல் முடியும் வரை அண்ணாமலை கிரிவலம் செல்லலாம். இருபத்தி நான்கு மணி நேரம் மிக மெதுவாக கிரிவலம் செல்ல வேண்டும்.

1.3.2022 செவ்வாய்க்கிழமை இரவு 12.44 பிறகு மாசி மாத அமாவாசை ஆரம்பிக்கிறது. 2.3.2022 புதன்கிழமை இரவு 11.49 வரை இருக்கிறது.

அமாவாசை நேரத்திற்குள் அண்ணாமலையாரை தரிசனம் செய்யலாம்.

நம்முடைய எல்லா கர்ம வினைகளும் படிப்படியாக நீங்கி நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு செல்வவளம் வருவதற்கு ஒரு சுலபமான வழிமுறை ஒன்றை நமக்கு நம்முடைய முன்னோர்களாகிய சித்தர்கள் உபதேசம் செய்து உள்ளார்கள்.

ஒவ்வொரு தேய்பிறை சிவராத்திரி அன்றும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும். கிரிவலம் வரும்போது சிவ புராணம் மற்றும் சைவத் திருமுறை பதிகங்கள் அல்லது ஓம் நமச்சிவாய என்ற சிவ மந்திரத்தை அல்லது சிவாய நம என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே கிரிவலம் வரலாம்.

கிரிவலம் வரும்போது கிரிவலப்பாதையில் உள்ள பைரவ வாகனங்களுக்கு பிஸ்கட், பொறை போன்றவைகளை தானம் செய்வது இன்னும் அதிகமான இறை ஆசியை பெற்று தரும்.

மறுநாள் அம்மாவாசை அன்று அண்ணாமலையில் நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்து முடித்த பிறகு அங்கே உள்ள சாதுக்கள் அல்லது ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று ஆண்டுகள் செய்து வருவதன் மூலமாக நம்முடைய அனைத்து கர்ம வினைகளும் பெருமளவு குறைந்து நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு செல்வவளம் நமக்கு கிடைத்துவிடும். இந்த பிறவி முழுவதும் ஆரோக்கியம் நிரம்பிய மற்றும் செல்வ வளம் நிரம்பிய வாழ்க்கை நமக்கு அமைந்துவிடும்.

கடந்த பல ஆண்டுகளாக இந்த வழிமுறையை பின்பற்றி ஏராளமானவர்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வருகிறார்கள் என்பது அனுபவ உண்மை.

சிவராஜயோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499

இதையும் பாருங்கள்:

தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய மந்திர வார்த்தைகள்!

அங்காள பரமேஸ்வரியின் அருளைத் தரும் இடியாப்ப சித்தர் மந்திரம்!

அத்தனை பிறவிகளையும் தீர்த்து அருளும் அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.