Astrology
மகரம் ராசி பங்குனி மாதம் ராசி பலன்கள் 2018!
மகரம் ராசியினருக்கு இந்த பங்குனி மாதம் தொட்ட காரியங்கள் வெற்றி பெறும் மாதமாக இருக்கப் போகிறது. உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் வீட்டில் அமர்ந்திருந்த சூரிய பகவானால் காது வலி, கண் சம்மந்தமானப் பிரச்சனை, பண நெருக்கடி போன்றவை ஏற்பட்டிருக்கும். இனி சூரிய பகவான் மூன்றாம் வீட்டிற்கு வருவதால் பிரச்சனைகள் விலகும். தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஏப்ரல் 10-ம் தேதி குரு பகவான் பதினோராம் இடத்தில் இருந்து வக்கிரம் பெற்று பத்தாம் வீட்டிற்கு துலாம் ராசிக்கு வருவதால் பெரிதும் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது.
சுக்கிரனால் பணத்திற்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் நிம்மதியான சூழல் ஏற்படும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவடையும். தந்தை வழியால் அனுகூலம் உண்டாகும். பிதுர்வழி சொத்துகள் சாதகமாக முடிவு பெறும். வெளியூர் பயணங்கள் , சுற்றுலா சென்று வருவீர்கள்.
மார்ச் 26-ம் தேதி சுப நிகழ்வுகள் நடைபெறும். சமூகத்தில் நற்பெயர் உண்டாகும். தடைபட்டு கொண்டிருந்தக் காரியங்கள் எல்லாம் படிப் படியாக முடிவடையும். மார்ச் 20-ம் தேதிக்கு பிறகு உறவினர்கள் வருகையால் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை.
மார்ச் 18-ம் தேதிக்குப் பிறகு ஆடை, அணிகலன்கள் சேர்க்கை உண்டாகும். காது வலி, முதுகு வலி, கழுத்து வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண உதவி, கடன் உதவி கிடைக்கும்.
மார்ச் 26-ம் தேதிக்கு பிறகு விழாக்கள், விசேஷங்கள் போன்றவற்றில் கலந்து கொள்வீர்கள். மன இறுக்கம் வந்து நீங்கும். இதுவரை உங்களை கண்டும் காணாதது போல் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் மகரம் ராசியினருக்கு இடையூறுகள் வரக்கூடும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். தவிர்க்க இயலாத செலவுகள் வரக்கூடும்.
அதிசார வக்ர குரு பகவான் பதினோராம் இடத்தில் 10-ம் தேதி வரை இருப்பதால் சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தைகள், மங்கள விசேஷம் எல்லாம் நடைபெறும்.
புதிய தொழில் முயற்சி செய்பவர்களுக்கு இந்த மாதம் ஏற்ற காலமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். நவீன யுக்திகள் பயன்படுத்தி லாபத்தை பெருகி கொள்ளலாம். ஏப்ரல் 2-ம் தேதிக்குப் பிறகு கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் எல்லாம் நல்ல படியாக முடிவுப் பெறும்.
மாணவ மாணவிகள் படிப்பில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கவனம் சிதறும் என்பதால் பெற்றோர் பிள்ளைகளை நல்லவழிப்படுத்த வேண்டும். ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகு சக மாணவர்களிடம் எச்சரிக்கையுடன் பழக வேண்டும். வீண் பழி, வம்பு, சண்டை போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை.
பரிகாரம்:
ஸ்வாதி நட்சத்திரம் அன்று யோக நரசிம்மரை தரிசித்து வாருங்கள். ராகு காலத்தில் நாக தேவதை வழிபாடு செய்தால் அதிகளவில் நன்மைகள் உண்டாகும்.
