தாமிரபரணி பெயர் மாற்றம் – தமிழக அரசுக்கு ஐகோர்ட் கால அவகாசம்!

தாமிரபரணி என்பது வடமொழிச் சொல் எனவே தாமிரபரணி ஆற்றை பொருநை நதி என்று பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட கோரிய வழக்கில் மனுதாரின் கோரிக்கையை ஏற்று பெயரை மாற்றுவது தொடர்பாக அரசு உரிய பரிசீலனை செய்து 12 வாரத்தில் முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துகுடியைச் சேர்ந்த பொன்காந்திமதிநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “பொதிகை மலையில் உற்பத்தியாகி, நெல்லை மாவட்டம் வழியாக மன்னார் வளைகுடா கடலில் கலப்பது தாமிரபரணி ஆறு. தாமிரபரணி என்பது வடமொழிச் சொல். தாமிரபரணி ஆறு முன்னதாக பொருநை நதி எனும் தமிழ்ப்பெயரால் வழங்கப்பட்டுள்ளது. திருவிளையாடல் புராணம், மங்கல நிகண்டு, முக்கூடற்பள்ளு, பெரிய புராணம் என பல தமிழ் இலக்கியங்களில் பொருநை நதி எனும் பெயரே வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு அகழ்வாராய்ச்சியாளர்களும், தமிழறிஞர்களும் இதனை உறுதி செய்துள்ளனர். தாமிரபரணி என்பது வடமொழிச்சொல் அதற்கு மாற்றாக தூய தமிழ் பெயரான பொருநை நதி என மாற்றம் செய்யக் கோரி தமிழக தலைமைச் செயலருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே தாமிரபரணியின் பெயரையும் பொருநை நதி என பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு
முன் விசாரனைக்கு வந்தது போது, மனு தாரர் கோரிக்கை முக்கியமானது என குறிப்பிட்ட நீதிபதிகள் கோரிக்கையான தாமிரபரணி என்பதை பொருநை ஆறு என மாற்றுவது குறித்து அரசு உரிய பரிசீலனை செய்து 12 வாரத்தில் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.