கரூரில் 50 பைசா கொண்டு வருபவருக்கு சிக்கன் பிரியாணி என்ற தனியார் பிரியாணி கடை அறிவிப்பால் கூட்டம் அலைமோதியதால் கடையின் உரிமையாளருக்கு முதலான் ஆண்டு விழா அன்றே போலீசார் எச்சரிக்கை விடுத்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் தனியார் பிரியாணி உணவகம் ஒன்று இன்று, தனது முதலாம் ஆண்டு நிறைவு விமரிசையாக கொன்டாடும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான சலுகையை அறிவித்தது. அதாவது 50 பைசா கொண்டு வருபவர்களுக்கு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. குறைந்த விலையில் பிரியாணி என்றாலே கூட்டம் அள்ளும், அதுவும் 50 பைசாவுக்கு பிரியாணி என்றால் சொல்ல வேண்டுமா?.
நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கையில் 50 பைசா காசை எடுத்துக்கொண்டு பிரியாணி வாங்க கியூவில் நிற்க ஆரம்பித்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகியுள்ளது. எங்கே பிரியாணி தீர்ந்துவிடுமோ? என ஆளாளுக்கு முண்டியடித்து வாங்க முயன்றுள்ளனர்.
இதனால் கட்டுக்காடாத அளவுக்கு கூட்டத்தில் பிரச்சனை வெடித்துள்ளது, இதுகுறித்து அப்பகுதி மக்கள் பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்து கூட்டத்தை ஒழுங்குப்பதிய போலீசார், அனுமதி பெறாமல் இதுபோன்று சலுகைகள் விடக்கூடாது என உரிமையாளரையும், ஊழியர்களையும் எச்சரித்துவிட்டுச் சென்றனர்.