அக்னி நட்சத்திரம் நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு.. கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்கின்றோமா?

நாளை மறுநாள் அதாவது மே நான்காம் தேதி அக்னி நட்சத்திரம் என்ற கத்தரி வெயில் தொடங்க இருக்கிறது என்றும் மே 28ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் நேரத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலத்தில் வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திர மேனன் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, வங்க கடலில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. மேலும் தென்னிந்திய பகுதிகளில் உள்ள ஒரு பகுதிகளில் கிழக்கிலிருந்து மேற்காக நகரும் காற்றும் மேற்கிலிருந்து கிழக்காக நகரும் காற்றும் சந்திக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது

காற்றில் ஈரப்பதத்தின் அளவு கூடி இருப்பதால் பரவலாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் தமிழகத்தில் 60 இடங்களில் கனமழையும் 13 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது அதிகபட்சமாக கடலூரில் 19 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது

இந்த நிலையில் மே மாதம் ஆறாம் தேதி தென்கிழக்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு மற்றும் அதன் காரணமாக மே ஏழு அல்லது எட்டாம் தேதி பலத்த சூறைக்காற்று வீசும் என்றும் பாலச்சந்திர மேனன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழக கடற்கரை பகுதியில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

அக்னி நட்சத்திரம் வெயில் காரணமாக மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில் காற்றழுத்த தாழ்வு காரணமாக கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் தகவல் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews