மனநலம் பாதித்தோர் குணமடைய வருகிறது சங்கடஹரசதுர்த்தி..! சந்திரனும், விநாயகரும் அருளும் அற்புத நாள்

சங்கட ஹர சதுர்த்தி என்றால் என்ன என்பதை அந்த வார்த்தையே நமக்கு விளக்குகிறது. சங்கடம் என்றால் துன்பம். ஹர என்றால் போகக்கூடியது. சங்கடங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை நம்மிடமிருந்து வேரோடு களைந்து நல்வழிக்குக் கொண்டு செல்லக்கூடிய விரதம் தான் சங்கடஹர சதுர்த்தி.

இந்த நாளில் விரதமிருந்தால் நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் கிடைத்துவிடும்.

ஆவணி மாதத்தில் வரக்கூடிய சதுர்த்தியை நாம் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம். அன்று முதல் மாதம் தோறும் வரக்கூடிய அத்தனை சதுர்த்தியிலும் நாம் விரதத்தைக் கடைபிடிக்கலாம்.

Vinayagar 3
Vinayagar

கைலாயத்தில் ஒருநாள் விநாயகப்பெருமான் தனது படைகள் மற்றும் தம்பிகளுடன் சேர்ந்து மகிழ்ந்து ஆடிப்பாடி விளையாடுகிறார். இதை வானுலகில் உள்ள தேவர்கள் யாவரும் பார்க்கின்றனர். அவர்களில் சந்திரனும் ஒருவர். அவர் யானைத்தலையுடன் வித்தியாசமாக உள்ள விநாயகரின் உருவைப் பார்க்கிறார்.

உடனே அவரது உருவைக் கேலி செய்கிறார் சந்திரன். யார் ஒருவர் மற்றவரின் தோற்றத்தைக் கேலி செய்கிறாரோ அவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று கருதும் விநாயகர் சந்திரனுக்கு சாபமிடுகிறார். எப்படி என்றால் உன்னுடைய ஒளி மங்கிப்போக வேண்டும் என்று. சந்திரனுக்கு அழகே ஒளி தான். அது குறைய குறைய குறைய அவர் எங்கே போய் இந்த சாபத்தைத் தீர்ப்பது என்று தெரியாமல் அலைகிறார்.

அதன்பிறகு எந்தத் தெய்வம் சாபம் கொடுத்ததோ அந்தத் தெய்வம் தான் சாபத்தை நீக்கும் வரத்தையும் தர முடியும் என்பதை அறிகிறார் சந்திரன். உடனே விநாயகரை நோக்கித் தவம் இருக்கிறார். அந்தவகையில் விநாயகர் சந்திரனுக்கு அருள்புரிந்த நாள் தான் சங்கடஹரசதுர்த்தி.

சந்திரனுடைய அருளும் விநாயகரின் அருளுடன் இந்த சங்கடஹரசதுர்த்தியில் நமக்கு சேர்ந்து கிடைக்கிறது என்பது தான் விசேஷம்.

குழந்தை இல்லாதவர்கள், நோயுள்ளவர்கள், திருமணமாகாதவர்கள், வேலை இல்லாதவர்கள் விநாயகப்பெருமானை வேண்டி விரதம் இருந்தால் அவர்களது எண்ணம் ஈடேறும்.

Vinayagar2
Vinayagar2

காலை எழுந்து குளித்ததும் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று 11 முறை விநாயகப்பெருமானை வலம் வந்து அருகம்புல்லால் அர்ச்சிக்க வேண்டும். பிறகு உபவாசம் இருக்க முடிபவர்கள் விரதம் இருக்கலாம்.

அன்று பழங்களை மட்டும் சாப்பிடலாம். மாலை நேரத்தில் விநாயகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யலாம். வீட்டில் பால் மட்டும் விட்டு, தண்ணீர் விட்டு அபிஷேகம் பண்ணலாம்.

Mothagam
Mothagam

சர்க்கரைப்பொங்கல், மோதகம், சுண்டல், பழ வகைகள் நைவேத்தியமாக வைக்கலாம். அதனுடன் நான் என்ற அகந்தையையும் இறக்கி வைத்துவிட வேண்டும். தீப தூப ஆராதனையைக் காட்டி வழிபடலாம்.

அல்லது கோவில்களுக்கும் சென்று விநாயகப்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளைப் பார்த்து வழிபடலாம்.

உங்களால் முடிந்த ஏதாவது ஒரு நைவேத்தியத்தை செய்து கொண்டு அதைக் கோவிலில் உள்ள பக்தர்களுக்குக் கொண்டு போய் கொடுக்கலாம். இது மிகப்பெரிய புண்ணியத்தைத் தரும்.

ஜாதகத்தில் சந்திரனை மனோகாரகன் என்பர். இதனால் சந்திரனின் அருள் கிடைக்கவும் இந்த நாளில் விரதம் இருக்கலாம். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த விரதம் நல்ல பலனைத் தரும்.

அந்த வகையில் இன்று (11.11.2022) இரவு 8.17 மணிக்கு துவங்கும் சதுர்த்தி திதி நாளை (12.11.2022) இரவு 10.25 மணிக்கு முடிகிறது. அதனால் இன்றைய நாளில் நாம் விரதம் இருந்து வேண்டும் பலன்களைப் பெறுவோம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.