இறையருளை அதிகளவில் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? அசுரனை சங்காக மாற்றிய கிருஷ்ணர்..!

இந்த உலகம் பரந்து விரிந்தது. மிகப்பெரியது. அகன்றது. இங்கு மனிதராகப் பிறந்தவர்களும் சரி. அனைத்து உயிர்களும் சரி. இறைவனுக்கு முன் சமம் தான். அதனால் கருணை மழையை அவர் எல்லோருக்கும் பொதுவாகத் தான் பொழிவார்.

அதைப் பெற்றுக் கொள்வதில் தான் அவரவர் திறமை உள்ளது. இனி மார்கழி 26 (10.01.2023)ம் நாளில் திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருப்பாவைப் பாடல்களைப் பற்றிப் பார்ப்போம்.

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளி எழுச்சியின் 6வது பாடல் இது. பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார் என்று ஆரம்பிக்கிறார்.

Markali 26
Markali 26

இந்தப்பாடலில் அடியார்களின் பெருமையைப் பற்றி ஒவ்வொன்றாக சொல்கிறார். கணவனின் பெயரைச் சொல்லி மனைவியின் பெயரைச் சொல்வது என்பது உலக வழக்கம். தெய்வங்களில் இது நேர் மாறானது. அம்பிகையின் பெயர் தான் முதலில் வரும். அதன்பிறகு தான் சுவாமியின் பெயர் வரும். பெண்களுக்கு முதலிடம் கொடுக்கணும்.

மனைவிக்கு முதன்மையைக் கொடுக்கணும் என்று அன்றே சிவபெருமான் சொல்லிவிட்டார். இறைவன் அனைவருக்கும் ஒரே தன்மையாகவே காட்சி அளிக்கிறார். கல்லார், கற்றவர், நல்லார், பொல்லார், பணக்காரர், ஏழை என அனைவரும் இறைவன் முன் ஒருவரே. அடியார் என்பது வேடமல்ல.

இதை உள்ளன்போடு ஏற்றுக்கொண்டு அந்த சிவனின் நாமத்தைச் சொல்லும் போது எவ்வளவு பேரின்பம் உள்ளது என்று அதை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும். திருவாரூரில் உள்ள சிவபெருமானைப் பார்த்து வணங்க அனைவரும் செல்கின்றனர்.

தேவர்களும் போகின்றனர். அடியார்களும் செல்கின்றனர். அடியார்களைப் பார்த்ததும் தேவர்கள் ஓரமாக ஒதுங்கி நின்றனர். தேவர்களே அடியார்களைத் தான் உயர்வாக எண்ணுவர். ஆண்டவனுக்கும் அடியார்கள் தான் உயர்ந்தவர்கள் என்று தேவர்கள் நினைப்பர்.

அடியார்களைப் போல எல்லா மனிர்களாலும் உள்ளன்போடு ஈர்ப்போடு இருந்துவிட முடியாது. பார்ப்பது என்பது ஒரு பொருளான இறைவனைத் தான். ஆனால் அத்தகைய பரம்பொருளிடமிருந்து பெறுவது என்பது வித்தியாசமாக இருக்கு. இது எப்படி என்றால் மழை என்பது எல்லோருக்கும் பொதுவானது தான்.

பெரிய பாத்திரத்தைக் கொண்டு வைத்தால் பாத்திரம் முழுவதும் மழை நீர் நிரம்பும். சிறிய பாத்திரத்தை வைத்தால் அந்தப் பாத்திரத்தின் அளவு தான் மழை நீர் நிரம்பும். இந்தப் பாத்திரத்தின் அளவு தான் இங்கு வித்தியாசப்படுகிறது. மழை ஒன்று தான்.

அது போல இறைவனை மழையாகக் கொண்டால் நாம் தான் பாத்திரம். அடியார்களாகிய நாம் எந்த அளவு நம்மைப் பாத்திரப்படுத்திக் கொள்கிறோமோ அந்த அளவு நமக்கு இறையருள் கிடைக்கும். நாமோ தேவையில்லாத குப்பைகளை எல்லாம் பாத்திரத்தில் வைத்து சிறிய அளவில் இறையருளைப் பெறுகிறோம்.

தேவையில்லாததைத் தூக்கிப் போட்டுவிட்டு அடியார்கள் பெரிய பாத்திரத்தில் இறையருளைப் பெற்றுக் கொள்கின்றனர்.

இங்கு அடியார்கள் என்னென்ன இயல்பு தன்மையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஏற்வாறு வழிபாடு நடைபெறுகிறது என்பதை இங்கு மாணிக்கவாசகர் பதிவு செய்கிறார்.

ஆண்டாள் அருளிய இன்றைய திருப்பாவைப் பாடலில் மாலே மணிவண்ணா..! மார்கழி நீராடுவான் என்று தொடங்குகிறார்.

Thiruppavai 26
Thiruppavai 26

இந்தப் பாடலில் எம்பெருமானைப் பற்றியும், அவரோடு இருக்கக்கூடிய பொருள்களைப் பற்றியும் ஆண்டாள் அழகுற எடுத்துக் கூறுகிறார். பாஞ்ச சன்யம் என்ற சங்கு ஒரு அசுரனின் வடிவமாக எம்பெருமானின் திருக்கரத்திலே அமைந்தது என்பது வரலாறு.

கிருஷ்ணரின் இளமைக் காலத்தில் நடந்த வரலாறு இது. பஞ்ச சன் என்று ஒரு அரக்கன் இருந்தான். அவன் கண்ணுக்குத் தெரிகிற முனிவர்களை எல்லாம் அழித்தான். அசுரர்களுக்கு எப்போதுமே முனிவர்கள் எதிரிகள் தான். முனிவர்கள் உலகம் செழிப்பாகவும் நல்லாவும் இருக்க வேண்டும் என்று தவம் செய்வர்.

அசுரர்களுக்கு தங்களோட ஆட்சி நடக்கணும் என்று விரும்புவர். இதனால் இருவருக்கும் எப்போதுமே ஆகாது. சாந்தீபனி என்று ஒரு மகரிஷி இருந்தார். அவரது மகனை இந்த பஞ்சசன் கொன்று விடுகிறார். அசுரனை எப்படி வெல்வது என்று சாந்தீபனி முனிவர் யோசிக்கிறார்.

இதற்கு என்று ஒரு காலம் வரும் என்று அமைதியாக இருக்கிறார். கிருஷ்ணருக்கு இந்த முனிவர் பல கலைகளைக் கற்பிக்கிறார். கிருஷ்ணபரமாத்மாவும் கற்றுத் தேர்ந்ததும் தனது குருநாதரான அந்த முனிவரிடம் விடைபெற்றுப் புறப்படுகிறார். அப்போது குருவுக்கு காணிக்கை வைப்பது வழக்கம்.

அப்போது சுவாமி நான் குரு காணிக்கைக் கொடுக்கணும். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு பஞ்ச சன் என்ற அசுரனை அழிக்க வேண்டும். இதுவே எனக்கு நீ தரும் குரு காணிக்கை. அப்போது அவனைத் தேடி கிருஷ்ணர் அலைகிறார். அவன் கடலுக்கு அடியில் இருக்கிறான்.

அவனுடன் யுத்தம் செய்து அவனை சங்காக மாற்றிக் கொண்டு முனிவரிடம் வருகிறார். நீ அவனைக் கொன்றதே போதும். உன்னுடைய வீரத்தின் அடையாளமாக இந்த சங்கு எப்போதும் உன் திருக்கரத்திலே இருக்கட்டும் என்கிறார். அன்று முதல் கிருஷ்ணரின் கையில் பாஞ்ச சன்யம் என்ற சங்கு இருந்தது.

பஞ்ச சன் என்ற அசுரனை அழித்ததை மகிழ்ச்சியாக ஏந்தினார். இது அசுரத்தன்மை வாய்ந்தது. அதனால் தான் யுத்தக்களத்தில் மட்டும் பெருமாள் அதை பயன்படுத்தினார். பாரதப்போர் நடந்த போது சங்கை ஊதித்தான் போரை ஆரம்பிப்பார்.

Srikrishna 2
Srikrishna 2

சங்கை ஊதித் தான் போரை நிறைவும் செய்வார். ஆண்டாள் நாச்சியார் பாஞ்ச சன்யம் என்ற சங்கோடு பல வலம்புரி சங்கின் நாதத்தையும் ரசிக்கக்கூடிய பெருமானே என அழைக்கிறார். சங்கு ஊதி இறைவனை வழிபடுவது ஒரு முறையான வழிபாடு தான். சங்கு சிவன், பெருமாள் ஆலயத்திற்கு உரியது.

வலம்புரி சங்கைக் கொண்டு அபிஷேகம் செய்வர். இது பூஜை அறையில் இருக்க வேண்டிய மங்கலமான பொருள். இது இயற்கையாகவே கடலில் இருந்து பிறக்கக்கூடியது. இதன் சுழி வலது பக்கமாக வளைந்து இருக்கும். இதை வீட்டில் வைத்து மலர் சாத்தி அன்றாடம் பூஜை செய்து வழிபட்டால் மிக உயர்ந்த நலன்கள் கிடைக்கும்.

மகாலட்சுமி இதில் வாசம் செய்கிறாள். மகாவிஷ்ணு எதெல்லாம் வைத்து இருக்கிறாரோ அவை எல்லாவற்றிலும் மகாலெட்சுமி இருக்கிறார். சுவாமிக்கு அன்றாடம் சங்கநாதம் இசைப்பர். அந்த சங்கின் ஒலியை எழுப்பி நாங்க எல்லோரும் உன்னை வழிபாடு செய்ய வந்து இருக்கிறோம். எங்களுக்கு அருள் செய்வாயாக என்று வேண்டுகிறார்.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.